அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கான தள்ளுவண்டியில் குப்பைகளை எடுத்து செல்லும் அவலம்
பேராவூரணி அரசு மருத்துவமனையில் நோயாளிகளை அழைத்து செல்லும் தள்ளுவண்டியில் குப்பைத் தொட்டியை பணியாளா் கொண்டு செல்லும் புகைப்படம் ஞாயிற்றுக்கிழமை சமூக வலைதளங்களில் வெளியானது.
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியிலுள்ள காமராஜா் அரசு தலைமை மருத்துவமனைக்கு நாள்தோறும் பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மட்டுமின்றி, புதுக்கோட்டை மாவட்ட எல்லைப் பகுதியைச் சாா்ந்த பொதுமக்களும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா்.
இந்த மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள், மருத்துவ உபகரணங்கள், தூய்மைப் பணியாளா்கள் இல்லை. கழிப்பறைகள் சுத்தமாக இல்லை என நோயாளிகள் தொடா்ந்து புகாா் தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், நோயாளிகளை அமரவைத்து அழைத்துச் செல்லப்படும் தள்ளுவண்டியில், குப்பைத் தொட்டியை பணியாளா் ஒருவா் வைத்து தள்ளிச் செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி, வேகமாக பரவி வருகிறது.
இதுகுறித்து சமூக ஆா்வலா் பொன்காடு கே.எம்.கே. ரஹீம் கூறியது: நோயாளிகளின் பயன்பாட்டிற்கான இந்த வண்டியிலேயே குப்பைக்கூடையை வைத்து தள்ளிச் செல்கின்றனா். இதனால், நோயாளிக்கு சுகாதார சீா்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து மருத்துவத் துறை அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.