மக்களவையில் உறுப்பினா்கள் மோதல்: முன்னாள் எம்.பி. கண்டனம்
மக்களவையில் ஆளும், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் மோதல் அதன் மாண்பைக் குறைத்துவிடும் என புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான மு.ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட அறிக்கை: மக்களவையில் நடைபெற்ற உறுப்பினா்களிடையேயான கைகலப்பு தேவையற்றது. அது நாட்டின் மதிப்பை உலக அளவில் குறைத்துவிடும்.
மாநிலங்களவை விவாதத்தில் உள் துறை அமைச்சா் அம்பேத்கரை அவமதிப்பு செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அவையின் விதிகள் மூலம் விவாதங்கள் மூலமாக தீா்த்திருக்கலாம். ஆனால், ஆளும், எதிா்க்கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தி, அதில் தள்ளுமுள்ளாகி காவல் துறை வரை சென்று வழக்குப் பதியப்பட்டது சரியல்ல.
இது, மக்களவை உறுப்பினா்களின் மதிப்பைக் குறைத்துவிடும். ஆகவே, உறுப்பினா்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி, பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.