வீழ்ச்சியின் விளிம்பில் காங்கிரஸ்: பசவராஜ் பொம்மை
காங்கிரஸ் கட்சி வீழ்ச்சியில் விளிம்பில் உள்ளதாக கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக எம்.பி.யுமான பசவராஜ் பொம்மை விமர்சித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் செய்தியாளர்களுடன் பசவராஜ் பொம்மை பேசியதாவது,
பாபாசாகேப் அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி அவமதித்தது. இதன் விளைவாக அப்போதைய பிரதமர் நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சியிலிருந்து அவர் விலகினார்.
தற்போது காங்கிரஸ் கட்சி அழிவின் விளிம்பில் உள்ளது. அவர்களின் பாரம்பரியம் என்ன என்பது அம்பலமானது. குறிப்பாக நாடாளுமன்றத்தில் அம்பலமாகியுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தியது. அம்பேத்கரை தவறாக சித்திரித்தது என காங்கிரஸ் கட்சி அம்பலமாகியுள்ளது.
இதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக காங்கிரஸ் கட்சி தனது சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. காங்கிரஸ் மறுபரிசீலனை செய்து மக்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இல்லையென்றால் காங்கிரஸ் கட்சியை மக்கள் மறக்க வேண்டிய நேரம் வந்துவிடும் எனக் குறிப்பிட்டார்.
அரசியல் நிா்ணய சபையால் அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டதன் 75 ஆண்டுகள் நிறைவை ஒட்டி, மாநிலங்களவையில் நடைபெற்ற 2 நாள் விவாதத்தின் நிறைவாகப் பேசிய அமித் ஷா,
அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்.
அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் எடுத்துக்கொள்வதில் பாரதிய ஜனதா கட்சி மகிழ்ச்சியடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்வுகள் குறித்தும் காங்கிரஸ் பேச வேண்டும்” என்று விமர்சித்திருந்தார்.
இதற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும், அபேத்கரை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.