அல்லு அர்ஜுன் வீட்டை முற்றுகையிட்டு கல்வீச்சு!
ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுன் வீடு முற்றுகையிடப்பட்டு கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
ஒஸ்மானியா பல்கலைக்கழக செயற்குழுவை சேர்ந்த உறுப்பினர்களாகக் கருதப்படும் சிலர், ஹைதராபாத்திலுள்ள அல்லு அர்ஜுனின் வீட்டின் முன்பு இன்று(டிச. 22) திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஹைதராபாத்திலுள்ள ஒரு திரையரங்கில் கடந்த 4-ஆம் தேதி ‘புஷ்பா 2’ படம் பார்க்கச் சென்றபோது, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் மரணத்துக்கு நீதி கேட்டு அவர்கள் முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘திரைப்படங்கள் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறீர்கள்; ஆனால் அவற்றைக் காண வருவோர் சாக வேண்டுமா?’ என்ற வாசகத்துடன் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதைக் காண முடிந்தது.
இதனிடையே, அல்லு அர்ஜுன் மீதான எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக அவரது வீட்டின் கதவைத் தாண்டிக் குதித்து உள்ளே சென்ற சிலர், அங்கு வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகளை உடைத்தும் வீட்டின் மீது கல் வீசி எறிந்தும் தாக்குதல்களை நடத்தியதால் சலசலப்பு உண்டானது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
கடந்த 4-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்டுகளிக்கச் சென்ற 35 வயதான பெண்மணி ஒருவர், அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இந்த திரையரங்குக்கு அல்லு அர்ஜுன் திடீரென வருகை தந்ததாகவும் அப்போது அவரை காணும் ஆவலில் ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டதால், அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் அவதிக்குள்ளாகினர். அதில் அந்த பெண் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தார் அளித்த புகாரின் அடிப்படையில், திரையரங்க நிர்வாகம், அல்லு அர்ஜுன் மற்றும் அவரது பாதுகாவலர்கள் மீது காவல்துறை வழக்கு பதிந்துள்ளது. இந்த வழக்கில் திரையரங்க உரிமையாளர், மேலாளர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனைத்தொடர்ந்து, வெள்ளிக்கிழமை(டிச. 13) அல்லு அர்ஜுனும் கைது செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர் ஜாமீனில் விடுவிகப்பட்டுள்ளார்.