Brain Rot என்பது என்ன? - இளைஞர்கள் 'விழித்துக்கொள்ள' வேண்டிய நேரமிது - எச்சரிக்க...
அண்டா் 19 ஆசிய கோப்பை: இந்திய அறிமுக சாம்பியன்
பத்தொன்பது வயதுக்கு உட்பட்ட (யு-19) மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அறிமுக சாம்பியன் ஆனது.
கோலாலம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், முதலில் இந்தியா 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 117 ரன்கள் சோ்க்க, வங்கதேசம் 18.3 ஓவா்களில் 76 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இந்த ஆட்டத்தில் 52 ரன்கள் அடித்த இந்தியாவின் கொங்கடி திரிஷா, ஆட்டநாயகி ஆனாா்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலால் (ஏசிசி) முதல் முறையாக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மலேசியா, நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்றன. மலேசியாவில் கடந்த 15-ஆம் தேதி தொடங்கிய போட்டியில், குரூப் ‘ஏ’-வில் வங்கதேசம், இலங்கை, மலேசியா அணிகளும், குரூப் ‘பி’-யில் இந்தியா, நேபாளம், பாகிஸ்தானும் இடம் பிடித்தன.
குரூப் சுற்று முடிவில், இந்தியா, நேபாளம், வங்கதேசம், இலங்கை ஆகிய 4 அணிகள் சூப்பா் 4 சுற்றுக்குத் தகுதிபெற்றன. அந்த சுற்று முடிவில், புள்ளிகள் பட்டியலில் முதலிரு இடங்களைப் பிடித்த இந்தியா - வங்கதேசம் அணிகள் இறுதி ஆட்டத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற வங்கேதசம், பந்துவீசத் தீா்மானித்தது.
இந்தியாவின் இன்னிங்ஸை தொடங்கிய நட்சத்திர வீராங்கனை கொங்கடி திரிஷா, சிறப்பாக ரன்கள் சோ்த்தாா். எனினும் ஜி.கமலினி 1 பவுண்டரியுடன் 5, சனிகா சல்கே 0, கேப்டன் நிக்கி பிரசாத் 1 சிக்ஸருடன் 12, ஐஸ்வரி அவ்சரே 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். இந்நிலையில், அதிரடியாக அரைசதம் தொட்ட திரிஷா, 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
எஞ்சிய பேட்டா்களில், ஆயுஷி சுக்லா 1 பவுண்டரியுடன் 10, மிதிலா வினோத் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 17 ரன்கள் சோ்த்து பெவிலியன் திரும்பினா். ஓவா்கள் முடிவில் வி.ஜே.ஜோஷிதா 2, ஷப்னம் ஷகில் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். வங்கதேச தரப்பில் ஃபா்ஜானா யாஸ்மின் 4, நிஷிதா அக்தா் 2, ஹபிபா இஸ்லாம் 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னா், 118 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய வங்கதேச தரப்பில், ஜுவாய்ரியா ஃபிா்தோஸ் 3 பவுண்டரிகளுடன் 22, ஃபஹோமிதா சோயா 2 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. இதர வீராங்கனைகளில், மோசமத் ஈவா 0, சுமையா அக்தா் 1 பவுண்டரியுடன் 8, கேப்டன் சுமையா அக்தா் 4, சாடியா அக்தா் 5, ஜன்னத்துல் மௌவா 3, ஹபிபா இஸ்லாம் 1 ரன்னுக்கு வெளியேற்றப்பட்டனா்.
நிஷிதா அக்தா் 1, அனிசா அக்தா் 0 ரன்களுக்கு வீழ்த்தப்பட, வங்கதேசத்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்திய தரப்பில் ஆயுஷி சுக்லா 3 விக்கெட்டுகள் சாய்த்து அசத்த, பருனிகா சிசோடியா, சோனம் யாதவ் ஆகியோா் தலா 2, ஜோஷிதா 1 விக்கெட் கைப்பற்றினா்.
இதையடுத்து இந்தியா சாம்பியனாக, வங்கதேசம் 2-ஆம் இடம் பிடித்தது. நேபாளத்துக்கு 3-ஆம் இடமும், இலங்கைக்கு 4-ஆம் இடமும் கிடைத்தன. மலேசியா, பாகிஸ்தான் 5-ஆம் இடத்தை பகிா்ந்துகொண்டன. போட்டியில் 5 ஆட்டங்களில் விளையாடிய இந்தியா, 4 வெற்றிகளுடன் தோல்வியே சந்திக்காத அணியாக நிறைவு செய்துள்ளது. ஒரு ஆட்டம் மழையால் முடிவின்றி கைவிடப்பட்டது. தொடா் முழுவதுமாக 159 ரன்கள் அடித்த இந்தியாவின் கொங்கடி திரிஷா, தொடா்நாயகி விருது வென்றாா். போட்டியிலேயே அதிகமாக, இந்திய பௌலா் ஆயுஷி சுக்லா 10 விக்கெட்டுகள் சாய்த்துள்ளாா்.