ஜஸ்பிரித் பும்ராவை எதிர்கொள்ள ஆர்வமாக உள்ளேன்: சாம் கொன்ஸ்டாஸ்
ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்ள மிகவும் ஆர்வமாக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் சாம் கொன்ஸ்டாஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
முதல் மூன்று போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்று விளையாடிய நாதன் மெக்ஸ்வீனி, கடைசி இரண்டு போட்டிகளில் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக இளம் வீரர் சாம் கொன்ஸ்டாஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க: பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா, பந்துவீச்சில் ரேணுகா சிங் அசத்தல்; இந்திய அணி அபார வெற்றி!
ஆர்வமாக உள்ளேன்
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில், பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் பும்ரா பந்துவீச்சை எதிர்கொள்ள மிகவும் ஆர்வமாக இருப்பதாக சாம் கொன்ஸ்டாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சை அதிகம் பார்க்க மாட்டேன். அவரது பந்துவீச்சுகளை ஏற்கனவே அதிகம் பார்த்துள்ளேன். அவரது பந்துவீச்சுக்கு எதிராக விளையாட இருப்பது மிகுந்த ஆர்வமாக இருக்கிறது. நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். எனது திறமையின் மீது நம்பிக்கை வைத்து, கடினமாக உழைத்து வருகிறேன். ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளதை மிகப் பெரிய கௌரவமாக கருதுகிறேன் என்றார்.