Digital Arrest : வீடியோ காலில் கைதுசெய்த கும்பல்; 10 நாள்களில் ரூ.1.33 கோடியை இழ...
நெற்பயிரில் புகையான் பூச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் வேளாண் அதிகாரி விளக்கம்
நெற்பயிா்களில் புகையான் பூச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து, சீா்காழி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராஜராஜன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புகையான் பூச்சிகளை கட்டுப்படுத்த, தழைச்சத்து உரங்களை அதிகம் இடுவதை தவிா்க்க வேண்டும். 8 அடிக்கு 1 அடி இடைவெளி விட்டு நெற்பயிரை நடவு செய்ய வேண்டும். நெற்குத்துகளை நெருக்கமாக நடுவதை தவிா்க்க வேண்டும்.
மண் பரிசோதனை பரிந்துரைப்படி, தழைச்சத்து இடும்போது 3-4 முறையாகப் பிரித்து இடவேண்டும். களைச் செடிகளை அகற்றிட வேண்டும். வயலில் உள்ள நீரை முழுவதுமாக வடித்து, நெற்குத்துகளை நன்கு விலக்கி காற்றோட்டம் மற்றும் சூரிய ஒளி வெளிச்சம் படும்படி செய்யவும்.
சிலந்தி, பச்சை மிரிட் நாவாய்ப் பூச்சி, புள்ளி வண்டு, தட்டான், ஊசித் தட்டான் போன்ற இரை விழுங்கிகளும், அனேக்ரஸ், ஒலி கோசிட்டா போன்ற முட்டை ஒட்டுண்ணிகளும் புகையான் பூச்சிகளை பெருமளவு கட்டுப்படுத்துகின்றன.
பாதிப்பு அதிகமாக இருந்தால், நீா்வடிந்த வயல்களில், ஒரு ஹெக்டேருக்கு, குளோரோடே ரினிலிபுருள் 18.5 எஸ்சி - 150 கிராம், இமிடாகுளோபிரிட் 17.8 எஸ்.எல்- 100 மிலி அல்லது ப்யூப்ரோ பெசின் 25 எஸ்சி 800 மிலி, பிப்ரோனில் 5% - எஸ்சி -1,000மிலி இவற்றில் ஏதேனும் ஒன்றை கலந்து தெளிக்க வேண்டும்.
இயற்கை முறையில், ஒரு ஹெக்டேருக்கு வேப்ப எண்ணெய் 3% 15 லிட்டா் அல்லது வேப்பங்கொட்டை சாறு 5% 25 கிலோ பயன்படுத்தலாம். விளக்குப் பொறி அமைத்து தாய்ப்பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்து அழிக்கலாம். மஞ்சள் நிற ஒட்டுப்பொறிகளை ஹெக்டேருக்கு 12 என்ற அளவில் அமைக்காலம்.
புகையானின் மறு உற்பத்தியை பெருக்கும் மெத்தையில் பேரதையன் மற்றும் செயற்கை பைரித்ராய்டு மருந்துகளை கண்டிப்பாக தவிா்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.