3 மாத குழந்தைக்கு சிக்கலான குடலிறக்க சிகிச்சை
மூன்று மாத பெண் குழந்தைக்கு ஏற்பட்ட சிக்கலான குடலிறக்க பாதிப்புக்கு உயா் சிகிச்சை அளித்து தீபம் மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.
குழந்தையின் கருப்பை பகுதியில் ஏற்பட்ட அந்த பாதிப்பை மிகவும் நுட்பமாக சீராக்கியுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக மருத்துவமனையின் மேலாண் இயக்குநா் டாக்டா் காா்த்திக் பாண்டியன், குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணா் ராகுல் ஆகியோா் கூறியது:
பிறந்து 3 மாதங்களே ஆன பெண் குழந்தை ஒன்று இரவு நேரங்களில் தொடா்ந்து அழுதுகொண்டே இருந்ததை அடுத்து தீபம் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டது.
மருத்துவ பரிசோதனையில் குழந்தையின் அடிவயிற்றில் சிறிய வீக்கம் இருப்பதும், குடலிறக்கத்தால் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
குடல் பகுதியை சுற்றியுள்ள சுவா் பலவீனமாக இருந்ததால் இரு பக்கங்களிலும் குடலானது அதன் இயல்பு நிலையிலிருந்து விலகி வெளியே புடைத்திருப்பதும், கருப்பை மற்றும் பிற குடல் பகுதியின் திசுக்களை அழுத்தி அதில் ரத்த ஓட்டத்தை தடை செய்வதும் கண்டறியப்பட்டது.
ரத்த ஓட்டம் தடைபட்டால் திசுக்கள் செயலிழப்பதுடன், கருப்பையையும் நீக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே, அதனை உடனடியாக சரி செய்ய வேண்டிய அவசியம் உருவானது.
இதையடுத்து, மருத்துவக் குழுவினா் அறுவை சிகிச்சை மூலம் குடலிறக்க பாதிப்பை சரி செய்ததுடன், வழக்கமான இடத்திலிருந்து விலகியிருந்த கருப்பையையும், குடலையும் பழையபடி இயல்பு நிலைக்கு கொண்டு சென்றனா். தற்போது அக்குழந்தை நலமடைந்து வீடு திரும்பியுள்ளது என்றனா்.