ரஷியாவில் புற்றுநோய் தடுப்பு மருந்து தயார்! இலவசமாக வழங்கவும் திட்டம்
`19 வயது பெண், 20 வயது ஆணுடன் லிவ்இன் உறவில் வாழலாம்’ - வழக்கும் மும்பை உயர் நீதிமன்ற உத்தரவும்
மும்பை காட்கோபர் பகுதியை சேர்ந்த 19 வயது பெண் 20 வயது வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். இந்த நிலையில் திடீரென அப்பெண் தனது வீட்டைவிட்டு வெளியேறி அந்த வாலிபர் வீட்டிற்கு சென்றுவிட்டார். ஆனால் அவர்கள் திருமணம் செய்யவில்லை.
அந்த வாலிபருக்கு 20 வயதுதான் ஆகிறது. அவருக்கு திருமண வயதான 21 ஆகவில்லை. இதனால் 21 வயதான பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தனர். ஆனால் பெண்ணின் பெற்றோர் இது தொடர்பாக போலீஸில் புகார் செய்தனர். அதோடு இதில் தொடர்புடைய இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சில மத அமைப்புகள் தலையிட்டு பெண்ணின் பெற்றோருக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர் என்ற தகவலும் வெளியானது. இதையடுத்து போலீஸார் அத்தம்பதியை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் வாலிபருக்கு 21 வயதாகவில்லை என்று கூறி போலீஸார் அப்பெண்ணை பெண்கள் முகாமிற்கு அனுப்பி வைத்தனர். இதை எதிர்த்தும், அப்பெண்ணை விடுவிக்கவேண்டும் என்றும் கோரி அந்த வாலிபர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனு நீதிபதி பாரதி மற்றும் மஞ்சுஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது அப்பெண் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் நீதிபதிகள் பேசிப்பார்த்தனர். அப்பெண் தான் தான் தொடர்ந்து தனது காதலனுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், அவருக்கு 21 வயதாகும் வரை அவருடன் லிவ் இன் முறையில் வாழ விரும்புவதாகவும், தனது பெற்றோருடன் செல்ல விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.
உடனே சம்பந்தப்பட்ட வாலிபரிடமும் கோர்ட் விசாரணை நடத்தியது. இறுதியில் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், பெண்கள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 19 வயது பெண்ணை அங்கிருந்து விடுதலை செய்யும்படி கேட்டுக்கொண்டது. இருவரும் இணைந்து வாழலாம். இருவரும் தங்களது துணையை தேர்ந்தெடுக்க சட்டம் கொடுத்திருக்கும் உரிமையில் எங்களால் தலையிட முடியாது. அவர்கள் சேர்ந்து வாழ்வதை சட்டத்தாலும் பிரிக்க முடியாது. எனவே முகாமில் அடைக்கப்பட்டுள்ள பெண்ணை உடனே விடுதலை செய்யவேண்டும். அப்பெண் தனது விருப்பப்படி வாழலாம். இவ்விவகாரத்தின் பெண்ணின் பெற்றோர் கவலை எங்களுக்கு புரிகிறது. ஆனால் அப்பெண்ணின் விருப்பத்தில் எங்களால் தலையிட முடியாது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.