தமிழகத்தில் ரூ.40 கோடியில் நவீன தொழில்நுட்ப மையங்கள் திறந்து வைப்பு!
மூத்த குடிமக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை! ஆம் ஆத்மி தேர்தல் வாக்குறுதி
புதுதில்லி: மூத்த குடிமக்களுக்கு தில்லி மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சிகிச்சையளிக்கப்படும் என்று அம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் வாக்குறுதியளித்துள்ளார்.
தில்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சுமார் 2 மாத காலமே உள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சி தேர்தல் பிரசாரத்தை முன்கூட்டியே மேற்கொள்ள தொடங்கிவிட்டது. அந்த வகையில் தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதாக அறிவித்திருந்தார். அதன்படி தில்லியில் மூத்த குடிமக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
‘சஞ்சீவனி யோஜனா’ திட்டத்தின்கீழ், 60 வயதைக் கடந்த தில்லி குடிமக்கள் அனைவருக்கும், தில்லியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சையளிக்கப்படும் என்று அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
“நாட்டை முன்னேற்ற கடினமாக உழைத்துள்ளவர்கள் நீங்கள் அப்படியிருக்கையில், இப்போது உங்களை குறித்து அக்கறை கொள்வது எங்களது கடமையாகும். சிகிச்சைக்கான செலவுக்கு எவ்வித உச்ச வரம்பும் கிடையாது. இதற்கான பதிவு முறை இன்னும் ஓரிரு நாள்களில் ஆரம்பமாகும். இதற்காக ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் உங்கள் வீடுகளுக்கே நேரடியாக வந்து பதிவு செய்து கொடுப்பார்கள். அப்போது உங்களுக்கு ஓர் அட்டை வழங்கப்படும். அதனை பத்திரமாக வைத்துக்கொள்ளவும். தேர்தலில் நாங்கள் வென்று மீண்டும் ஆட்சியமைத்ததும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார் அரவிந்த் கேஜரிவால்.
முன்னதாக கடந்த அக்டோபரில் பேசிய அரவிந்த் கேஜரிவால், மத்திய அரசின் ‘பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மக்கள் நலத் திட்டம்’, தில்லி யூனியன் பிரதேசத்தில் செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிட்டிருந்ததும் கவனிக்கத்தக்கது. தில்லி குடிமக்களுக்கு ரூ. 1 கோடி வரையிலான மருத்துவ சிகிச்சையளிக்கும் திட்டம், ஆம் ஆத்மி அரசால் செயல்படுத்தப்படுவதால் மத்திய அரசின் சுகாதாரத்துறை திட்டத்தை அமல்படுத்த தேவையில்லை என்று அவர் விளக்கமளித்திருந்தார்.
இந்த நிலையில், மூத்த குடிமக்களுக்கான இலவச மருத்துவ திட்டத்தை அமல்படுத்தப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.