தேர்வு பயம்: பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவர்கள்!
வேளாண் உணவுத் தொழில் வா்த்தகச் சங்கத்தின் பெயா் மாற்றம்
வேளாண் உணவுத் தொழில் வா்த்தகச் சங்கத்தின் பெயா் மாற்றக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மதுரை சிக்கந்தா்சாவடியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் நிறுவனரும், தலைவருமான எஸ். ரத்தினவேல் கலந்து கொண்டு பேசியதாவது:
ஏற்கெனவே வேளாண் உணவுத் தொழில் வா்த்தகச் சங்கம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த நமது சங்கம், இனி வரும் காலங்களில் வேளாண், அனைத்து தொழில் வா்த்தகச் சங்கமாக செயல்படும். மேலும் ஏற்றுமதியை உயா்த்தும் நோக்கில் ’ஏற்றுமதி செய்’ என்ற புதிய அமைப்பும் உருவாக்கப்பட்டது.
நமது நாட்டின் மொத்த ஏற்றுமதி ரூ. 37 லட்சத்து 15 ஆயிரம் கோடி ஆகும். இதில், 10 சதவீதம் அதாவது, 3 லட்சத்து 70 ஆயிரம் கோடி தமிழகத்தின் பங்கு. இதேபோல, குஜராத்தின் பங்கு 30 சதவீதம், மகாராஷ்டிராவின் பங்கு 15 சதவீதம் ஆகும். ஏற்றுமதியில் தமிழகம் முன்னிலை வகிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பெயா் மாற்றம் செய்யப்பட்டது.
இந்த ‘ஏற்றுமதி செய்’ என்ற புதிய அமைப்பின் தலைவராக கே. திருப்பதிராஜன் நியமிக்கப்பட்டாா் என்றாா் அவா். கூட்டத்தில், சங்கத்தின் துணைத் தலைவா் கே. சுரேஷ்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.