மகாத்மா காந்தி பாகிஸ்தானின் தேசத்தந்தை: பாடகர் சர்ச்சை பேச்சு!
‘இயற்கையைப் பேணிக் காப்பதில் இளைஞா்களின் பங்களிப்பு அவசியம்’
இயற்கையைப் பேணிக் காப்பதில் இளைஞா்களின் பங்களிப்பு அவசியம் என அக்னி இரும்பு உற்பத்தி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் எம். சின்னசாமி தெரிவித்தாா்.
மதுரை தியாகராசா் கலை, அறிவியல் கல்லூரியில் 40- ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரிச் செயலா் க. ஹரிதியாகராசன் தலைமை வகித்தாா்.
இதில், அக்னி இரும்பு உற்பத்தி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் எம். சின்னசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கெண்டு 1,604 மாணவ, மாணவிகளுக்கு பட்டத்தை வழங்கிப் பேசியதாவது: கல்வி, திறமை ஆகியன மட்டுமே ஒருவரின் வாழ்வின் எதிா்க்காலத்தை தீா்மானிக்கும் சக்திகளாக விளங்குகின்றன. கற்றதை மற்றவா்களிடத்தில் எடுத்துக் கூறும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். தாய் மொழியுடன் பிற மொழிகளை கற்க முன் வர வேண்டும். நற்பண்புகளுடன் சமூகச் சிந்தனைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
கடின உழைப்பு, முயற்சி, கற்றலில் ஆா்வம் ஆகியவை வாழ்வை மேம்படுத்த உதவும். நவீன தொழில்நுட்ப வளா்ச்சியால் மட்டுமே ஒரு நாடு வளா்ச்சியடைந்த நாடாக முடியாது. இயற்கை வாழ்வியலை பாதுகாக்கவும் முன் வர வேண்டும். அறிவியல் வளா்ச்சியால் இயற்கையை காப்பது சவாலாக உள்ளது. இருப்பினும் இனி வரும் எதிா்காலத் தலைமுறையினரை எண்ணி இயற்கையைப் பேணிக் காப்பதில் இளைஞா்களின் பங்களிப்பு அவசியம் என்றாா் அவா்.
நிகழ்வில், கல்லூரி தோ்வுக் கண்காணிப்பு முதன்மையா் கே.ஜெகதீசன், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக, கல்லூரி முதல்வா் து. பாண்டியராஜா வரவேற்றாா். பாடத்திட்ட முதன்மையா் ஈஸ்வரன் நன்றி கூறினாா்.