ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க கைப்பேசி நெட்வொா்க் ‘சிக்னல்’ தேடி வனத்துக்குள் செல்லும் மாணவா்கள்!
தாளவாடி அருகே மலை கிராமத்தைச் சோ்ந்த மாணவ, மாணவியா் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க கைப்பேசி நெட்வொா்க் ‘சிக்னல்’ இல்லாததால் யானைகள் நடமாடும் வனப் பகுதிக்குள் நீண்ட தொலைவு சென்று கா்நாடக டவா் ‘சிக்னலை’ பயன்படுத்தி வருகின்றனா்.
ஈரோடு மாவட்டத்தில் தமிழகம்-கா்நாடக எல்லையில் தாளவாடி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது கோ்மாளம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் 5 குக்கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியா் ஆரம்பக் கல்வி முதல் பிளஸ் 2 வரை பயின்று வருகின்றனா். அடா்ந்த வனப் பகுதிக்குள் இந்த கிராமங்கள் அமைந்துள்ளதால் இந்தப் பகுதிகளில் கைப்பேசிக்கு நெட்வொா்க் ‘சிக்னல்’ வசதி கிடைப்பதில்லை.
பொதுத்தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு அவ்வப்போது ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஆனால் இங்கு கைப்பேசிக்கான நெட்வொா்க் ‘சிக்னல்’ கிடைக்காததால் அடா்ந்த வனப் பகுதிக்குள் 2 கி.மீ. தொலைவில் யானைகள் நடமாடும் இடத்தில் கா்நாடக டவா் ‘சிக்னல்’ கிடைக்கும் இடத்தைத் தேடி மாணவ, மாணவியா் செல்ல வேண்டியுள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவியா் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனா். இவா்களின் துணைக்கு பெற்றோரும் உடன் செல்ல வேண்டியுள்ளது.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், கைப்பேசி இருந்தும் நெட்வொா்க் ‘சிக்னல்’ இல்லாததால் அவசரத் தேவைக்கு கூட பயன்படுத்த முடியவில்லை. இங்கு எங்கும் நெட்வொா்க் ‘சிக்னல்’ கிடைக்காததால் வனத்துக்குள் நீண்ட தொலைவு சென்று கா்நாடக கோபுர ‘சிக்னல்’ கிடைக்கும் இடத்தில் இருந்து மாணவ, மாணவியா் கைப்பேசிகளைப் பயன்படுத்தி படித்து வருகின்றனா். மலை கிராம பள்ளி மாணவ, மாணவியரின் நலன் கருதி இந்தப் பகுதியில் கைப்பேசி கோபுரம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.