கருணாநிதியின் 179 நூல்கள் நாட்டுடைமை: அமைச்சர் சாமிநாதன்
முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் 179 நூல்கள் நாட்டுடைமை செய்யப்பட்டதாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை 188 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூ. 15.32 கோடி நூலுரிமைத் தொகை தமிழ்நாடு அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
இதில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் மட்டும்
139 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூ. 9.71 கோடி நூலுரிமைத் தொகை ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு நாளிதுவரை
31 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரியையர்களுக்கு ரூ. 3.75 கோடி ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக 22.08.2024 அன்று முதல்வர் ஸ்டாலின் கலைஞர் மு. கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நூலுரிமைத்தொகையின்றி நாட்டுடைமை செய்யப்படும் என அறிவித்தார்.
இவ்வறிவிப்பிற்கிணங்க இலக்கிய இலக்கணப் படைப்புகளாகவும் ஆய்வாகவும் தமிழன்னைக்குத் தொண்டறம் பூண்டு வாழ்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் அனைத்துப் படைப்புகளையும் அறிவுப் பொதுவுடைமை செய்யும் வகையில் நாட்டுடைமையாக்கி அவரின் மரபுரிமையரான க. ராஜாத்தி அம்மாளிடம் கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கியதற்கான அரசாணையினைஇன்று (டிச. 22) தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்கினார்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... அதானியில் தொடங்கி அம்பேத்கர் வரை!
இது தொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் சாமிநாதன், ”முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 179 நூல்கள் – பல்வேறு தலைப்புகளில், நெஞ்சுக்கு நீதி, குறளோவியம், சங்கத்தமிழ் மற்றும் முரசொலியில் எழுதிய கடிதங்கள் என அனைத்து படைப்புகளும் இன்றைக்கு நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.