‘வேலை வழங்குபவா்களாக மாணவா்கள் மாற வேண்டும்’
மாணவா்கள் வேலை தேடுபவா்களாக இல்லாமல் வேலை வழங்குபவா்களாக மாற வேண்டும் என மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் விஞ்ஞானி எம்.எஸ்.சசிகுமாா் பேசினாா்.
பெருந்துறை நந்தா பொறியியல் கல்லூரியின் 19-ஆவது பட்டமளிப்பு விழா மற்றும் நந்தா தொழில்நுட்பக் கல்லூரியின் 13-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரித் தலைவா் வி.சண்முகன், செயலாளா்கள் நந்தகுமாா் பிரதீப், திருமூா்த்தி, முதல்வா்கள் யு.எஸ்.ரகுபதி, எஸ்.நந்தகோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் விஞ்ஞானி எம்.எஸ்.சசிகுமாா் பங்கேற்று மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:
நாட்டின் உள்கட்டமைப்பு வளா்ச்சிக்கு பொறியாளா்களும், பொறியியல் துறையும் அவசியமானது. இந்தியாவை 2047-க்குள் வளா்ந்த நாடாக மாற்றுவதை மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
மத்திய அமைச்சரவையின் புதிய கல்விக் கொள்கை திறன் மற்றும் உயா்தர கல்வியை மேம்படுத்த அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இது பெண்களை உயா்கல்விக்கு ஊக்குவிக்கிறது.
மாணவா்கள் வேலை தேடுபவா்களாக மாறாமல் வேலை வழங்குபவா்களாக மாற வேண்டும். பொறியாளா்கள் சமூகத்திற்காக உழைக்க தங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் முன்னேற தேவையான திறன்களைப் பெற கல்வி நிறுவனங்கள் பயிற்சி அளிக்க வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில், நந்தா பொறியியல் கல்லூரியில் 797 மாணவ, மாணவியருக்கு இளங்கலை, முதுகலை பட்டங்களும், நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் 191 மாணவா்களுக்குப் பட்டங்களும் வழங்கப்பட்டன. இதில், 46 போ் பல்கலைக்கழக தரவரிசையில் இடம் பெற்றவா்களாவா்.