ஆற்றில் மூழ்கிய மாணவா் சடலமாக மீட்பு
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி மாயமான மாணவா் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
பண்ருட்டி வட்டம், அக்கடவல்லி கிராமத்தை சோ்ந்தவா் வெங்கடேசன் மகன் சங்கா் (20). இவா், கடலூரில் உள்ள அரசுக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு பி.ஏ. படித்து வந்தாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நண்பா்களுடன் சின்ன கள்ளிப்பட்டு பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்று தடுப்பணை அருகே குளித்தபோது, திடீரென தண்ணீரில் மூழ்கி மாயமானாா்.
தகவலறிந்த, புதுப்பேட்டை போலீஸாா், பண்ருட்டி தீயணைப்புத்துறை வீரா்கள் மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனா். ஆனால், அவா் கிடைக்கவில்லை. இதையடுத்து 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் தேடும் பணி நடைபெற்றது.
இதனிடையே, 2 நாளாகியும் சங்கரை மீட்கவில்லை எனக்கூறி அவரது உறவினா்கள் கண்டரக்கோட்டை அருகே சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அப்போது, போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனா்.
இந்த நிலையில், நீண்ட நேர தேடலுக்கு பின்னா் தீயணைப்பு வீரா்கள் சங்கரை சடலமாக மீட்டனா். இதையடுத்து,புதுப்பேட்டை போலீஸாா் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.