8 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் பகவத் கீதையைச் சேர்க்க உத்தரவு!
தேசிய கல்விக் கொள்கையின் படி அனைத்துப் பள்ளிகளிலும் தரமான கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்யவும், 8 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் பகவத் கீதையைச் சேர்க்கவும் அதிகாரிகளுக்கு ஹரியானா முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் தொடக்கக் கல்வி, பள்ளிக் கல்வி, உயர்கல்வித் துறை அதிகாரிகள் கூட்டம் இன்று நடைபெற்றது.
பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தால், அதை போக்கும் விதமாக ஆசிரியர் நியமனம் தொடர்பான ஒரு விரிவான திட்டத்தை தயாரிக்க வேண்டும் என்று முதல்வர் சைனி உத்தரவிட்டார்.
ஹரியானாவில் ஆசிரியர் பற்றாக்குறை இல்லை என்று தெரிவித்த அவர் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றும் புதிய கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முடிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அது மட்டுமின்றி மாணவர்களுக்கு ஒழுக்கம், தர்க்கநெறிகள் குறித்த சிந்தனையை வளர்க்க 8 வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
ஹரியானா அரசு குறிப்பிட்ட அளவில் மாதிரி சமஸ்கிருதப் பள்ளிகளை நிறுவியுள்ளது. அவை சிபிஎஸ்இ கல்வியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகள் ஆங்கில வழிக் கல்வியுடன் கணிதம் மற்றும் அறிவியலையும் கற்பிக்கும் விதமாக இயங்குகின்றன. சமஸ்கிருதப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான தேவை மற்றும் போட்டி அதிகரித்து வருவதால், சமஸ்கிருதப் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் முதல்வர் நயாப் சிங் சைனி தெரிவித்தார்.