Toxic: KGF புகழ் யஷ்-ஐ இயக்கும் மலையாள நடிகை - கூகுளில் அதிகம் தேடப்படும் இவர் யார்?
கன்னட திரையுலகின் பிரபல நடிகர் யஷ். கே.ஜி.எஃப் மூலம் இந்திய ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இவருக்கு, நேற்று பிறந்தநாள். அதை முன்னிட்டு அவர் நடித்து வரும் டாக்ஸிக் திரைப்படத்தின் டீசர் வெளியானது.
அந்த டீசரில் வரும் காட்சியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதைத் தொடர்ந்து, இந்தப் படத்தை இயக்கும் இயக்குநர் கீத்து மோகன்தாஸ் குறித்தும் அதிகம் தேடப்பட்டு வருகிறது.
நடிகை கீத்து மோகன்தாஸ்...
டாக்ஸிக் திரைப்படத்தின் இயக்குநரான கீது மோகன்தாஸ், பல வெற்றிப் படங்களில் நடித்த நடிகை. பிப்ரவரி 14, 1981 அன்று கேரளாவின் கண்ணூரில் பிறந்த இவரது இயற்பெயர், காயத்ரி மோகன்தாஸ். குழந்தை நட்சத்திரமாக சினிமா பயணத்தைத் தொடங்கினார். இவர் நடித்த நான்காவது படம் 'ஒன்னு முதல் பூஜ்யம் வரே' 1986-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் கீத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அந்தப் பெயரே சினிமாத் துறையில் நீடித்து வருகிறது.
இவரின் ஐந்தாவது வயதில் மோகன்லாலுடன் நடித்திருந்தார். சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரள மாநில திரைப்பட விருதைப் பெற்று, தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். மோகன்லாலின் 'லைஃப் இஸ் பியூட்டிஃபுல், திலிப் நடித்த தென்காசிப் பட்டணம், அகாலே போன்ற குறிப்பிடத்தக்க பல மலையாளப் படங்களில் நடித்திருக்கிறார். அகாலே படத்தில் அவர் நடிப்பிற்காக, மலையாளத்தில் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார். 2009-ம் ஆண்டு அவர் நடித்த கடைசிப் படம் 'நம்மல் தம்மில்'. அதற்குப் பிறகு அவர் திரைப்படங்களில் நடிப்பதைத் தவிர்த்தார்.
இயக்குநர் அவதாரம்:
2009-ம் ஆண்டு தன் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான "அன்பிளக்டு" தயாரிப்பில் "கெல்க்குன்னுண்டோ" என்ற குறும்படத்தின் மூலம் கீத்து மோகன்தாஸ் இயக்குநராக அவதாரம் எடுத்தார். இந்தப் படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா திரையிடப்பட்டு, சிறந்த குறும்படத்திற்கான மூன்று சர்வதேச விருதுகளையும், இந்தியாவில் தேசிய திரைப்பட விருதையும் வென்றது. அதைத் தொடர்ந்து இந்தப் படம் 2014-ம் ஆண்டு 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான கேரள மாநில பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. மலையாளத் திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவியைத் திருமணம் செய்துகொண்டார். 2013-ம் ஆண்டு, கீத்து மோகன்தாஸ், கீதாஞ்சலி தாபா - நவாசுதீன் சித்திக் நடித்த "லையர்ஸ் டைஸ்" படத்தின் மூலம் இயக்குநராக திரையுலகுக்கு அறிமுகமானார்.
நம்பிக்கை இயக்குநர்...
இந்தப் படம் விமர்சன ரீதியில் பாராட்டைப் பெற்றது. சிறந்த நடிகை மற்றும் சிறந்த ஒளிப்பதிவுக்கான இரண்டு தேசிய விருதுகளையும் பெற்றது. சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படப் பிரிவில் 87வது அகாடமி விருதுகளுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ அடையாளமாகவும் இந்தப் படம் இருந்தது. ஆனால், அதில் வெற்றிபெறவில்லை. அவரது இரண்டாவது திரைப்படமான மூத்தோன் (தி எல்டர் ஒன்), அவரது வெற்றிப் பயணப் பாதையை நீட்டியது. 2016-ல் சன்டான்ஸ் திரைப்பட விழாவில் உலகளாவிய திரைப்படத் தயாரிப்பாளர் விருதைப் பெற்ற அந்தப் படம், பாலின அடையாளம், காதல் ஆகியவற்றின் சிக்கலான கருப்பொருளை நேர்த்தியாகக் கையாண்டது.
இந்தத் திரைப்படம், இயக்குநராக கீத்து மோகன்தாஸை 'ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட திரைப்படத் தயாரிப்பாளர்' என்ற அவரின் அடையாளத்தை உறுதிப்படுத்தியது. இவரின் அடுத்தப் படத்தில்தான் கன்னட திரைப்பிரபலம் யாஷ் முன்னணி வேடத்தில் நடித்திருக்கிறார். கேஜிஎஃப்: அத்தியாயம் 2-க்குப் பிறகு, யாஷ் நடிப்பில் திரைக்கு வரும் படம் என்பதால், பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தத் திரைப்படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.