Prabhu Deva சென்னையில் பிரபுதேவா லைவ் டான்ஸ் கான்சர்ட்; ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் நடப்படும் மரக்கன்று
வருகின்ற பிப்ரவரி 22-ம் தேதி, சென்னை ஒய்.எம்.சி.ஏ நந்தனம் கிரவுண்டில் நடைபெறவிருக்கும் பிரபு தேவா லைவ் டான்ஸ் கான்சர்ட், இந்திய நடனத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக அமைவதாக உள்ளது. இந்த கான்சர்ட் தொடங்குவதற்கான டிக்கெட் விற்பனை தொடக்க விழா நேற்று இரவு ஹயாத் ரிஜென்ஸியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வின் சிறப்பம்சம், ஒவ்வொரு விற்பனையாகும் டிக்கெட் தொகை கொண்டும் ஒரு மரக்கன்று நடப்படும் என்ற அறிவிப்பாகும்.
அருண் ஈவென்ட்ஸ் நிறுவனம் நவீன திட்டமிடலுடனும் சூழல் விழிப்புணர்வுடனும் இதனை ஏற்பாடு செய்துள்ளது. நிறுவனத்தின் தலைவர் அருண், "இந்த நிகழ்ச்சியின் மூலம் கலை, சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்தின் மீது சிறந்த தாக்கத்தை உருவாக்க வேண்டும் என்பது எங்களின் நோக்கம்" என்று கூறியபோது, அங்கிருந்த அனைவரும் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் குழந்தைகள் பலர் நடனமாடி, பிரபு தேவாவை வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரபு தேவா, ``சினிமாவில் கட் பண்ணி, எடிட்டிங் செய்ய முடியும். ஆனால் லைவ் கான்சர்ட்ல அத பண்ண முடியாது. இதை எப்படி பண்ண போறோம்னு ஒரு பயம் இருந்துட்டே இருக்கு. இருந்தாலும் மக்களோட அன்பையும் ஆசீர்வாதத்தையும் கொண்டு இத பண்ண முடியும்னு நம்புறேன்.” என்றார்.
இந்நிகழ்ச்சியின் மற்றொரு முக்கிய சிறப்பு, பிரபு தேவாவின் ஐகானிக் நடன வடிவத்தைக் கொண்ட டி-ஷர்ட் வெளியீடு ஆகும். இந்த டி-ஷர்ட் ரசிகர்களுக்கு பிரபு தேவாவின் கலைத்திறமையை நினைவுகூரும் ஓர் அடையாளமாகும்.
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அருண் இதைப் பற்றி கூறும்போது, "இந்தியாவில் இதுவரை பாடல் கச்சேரிகள் பல நடந்துள்ளன. ஆனால் நடனத்தை மையமாக வைத்து நடத்தப்படும் கச்சேரி என்றால் இதுதான் முதன்முறை," எனத் தெரிவித்தார்.
அருண் ஈவென்ட்ஸ் மற்றும் IBA Ticketing partner அறிவிப்பின் படி, விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும், ஒரு மரக்கன்று நடப்படும் என்பது, நிகழ்ச்சியைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் நோக்குடன் இணைத்துள்ளது. இது நிகழ்ச்சிக்கு மேலும் ஒரு அடையாளமாகும்.