ஊட்டி: வனவிலங்கு தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரம்; காத்திருந்த வனத்துறை கூண்டில் சிக்கிய கரடி!
வனவிலங்குகளுக்கான வாழிடச் சூழல் அருகி வரும் நீலகிரியில் மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஊட்டி அருகில் உள்ள எடக்காடு சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த சதீஷ் குமார் என்கிற இளைஞர் கடந்த வாரம் தேயிலை தோட்ட பணி முடிந்து வீடு திரும்பும் வழியில் அருகில் உள்ள புதர் பகுதியில் இயற்கை உபாதை கழிக்க சென்றிருக்கிறார். புதரில் இருந்த வனவிலங்கு எதிர்பாராத விதமாக தாக்கியதில் கடுமையான காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து கிடந்தார். இளைஞரின் உடலை மீட்டு கூறாய்வு செய்தனர்.
மேலும் இளைஞரை தாக்கிய விலங்கினம் குறித்து கண்டறிய வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அந்த பகுதிகளில் தானியங்கி கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தியதுடன் கூண்டுகளும் வைத்து காத்திருந்தனர். இந்நிலையில், வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் இன்று அதிகாலை கரடி ஒன்று சிக்கியிருக்கிறது. அந்த கரடியின் உடல்நிலையைப் பரிசோதித்த வனத்துறையினர், கூண்டுடன் கரடியை வாகனத்தில் ஏற்றி முதுமலை புலிகள் காப்பகத்தின் அடர் வனப்பகுதிக்குள் பத்திரமாக விடுவித்துள்ளனர்.