செய்திகள் :

`இந்தியா - தொழிலாளர்களின் கண்ணீர் பள்ளத்தாக்கு அல்ல!' - ஆதவன் தீட்சண்யா| Long Read

post image

‘‘சோளத்தை அரைக்கும் கரங்களை விடுவித்துவிடுங்கள்,

மாவரைக்கும் சிறுமியர் அமைதியாகத் தூங்கட்டும்,

இந்த நாள் முடிவுக்கு வருகிறதென்று அதிகாலைச் சேவல் வெறுமனே ஒப்புக்கு கூவட்டும்!

சிறுமிகளின் வேலையைத் தேவதைகள் செய்யவேண்டுமென திமிதா உத்தரவிட்டுள்ளார்.

இப்போது இவர்களது கரங்கள் சக்கரங்களின் மீது மெதுவாகத் தாவிச் செல்லட்டும்,

அதனால் அதிரும் அச்சுக்கள் கம்பிகளைச் சுழற்றட்டும்.

சுழன்றரைக்கும் அரவைக்கல் பளுவைச் சுழற்றிவிடட்டும்.

நாம் நமது தந்தையர் வாழ்வை வாழ்வோம். வேலையிலிருந்து ஓய்வெடுப்போம். தேவதைக்கடவுள் நமக்கு அனுப்பியுள்ள பரிசுகளை மகிழ்ந்தனுபவிப்போம்..’’ -

Representational Image
Representational Image

சோளம் அரைக்கும் நீராலை இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதுமே உழைப்பிலிருந்து சிறுமியரை விடுவிக்கும்படியும் வேலையிலிருந்து ஓய்வெடுக்கும்படியும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆன்டிபரோஸ் என்ற கிரேக்கக்கவிஞனால் இப்படி எழுத முடிந்திருக்கிறது. எனில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் பயன்பாடு உச்சத்தில் இருக்கும் காலத்தில் வாழும் நாம் ஏன் இன்னமும் ஓய்வின்றியும் நீண்டநேரம் வேலை செய்ய வேண்டியவர்களாகவும் இருக்கிறோம்?

18-20 மணிநேரம் உழைப்பு:

‘‘அன்றாடம் 18 - 20 மணிநேரம் பணியாற்ற முடிந்தவர்கள் மட்டும் என்னோடு இருங்கள். முடியாதவர்கள் அவரவர் வழியைப் பார்த்துக்கொண்டு விலகிச் செல்லுங்கள்’’ என்று யோகி ஆதித்யநாத் 2017ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றதுமே வெளியிட்ட அறிவிப்பு ஊடகங்களில் தலைப்புச் செய்தியானது. ஒரு தொழிலாளியோ ஊழியரோ தனது ஒவ்வொரு நாளிலும் இயல்பான மனிதவாழ்க்கையை வாழ்வதற்கு ஏற்றாற்போல அவரது அன்றாடம் அறிவியல்பூர்வமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதற்காக நடந்த போராட்டங்கள், சிந்திய ரத்தம், செய்த தியாகம், நடப்பிலுள்ள சட்டப் பாதுகாப்பு - இவை எதையும் பொருட்படுத்தாமல் அப்படியொரு அறிவிப்பை அவர் வெளியிட்டார். அவ்வாறு அவர் சொன்னதின் நடைமுறைச் சாத்தியம், தேவை பற்றியெல்லாம் விவாதிக்காமல் வேலைக்கலாச்சாரத்தை மீட்கவந்த தேவதூதன் என்று அவருக்கு புகழாரம் சூட்டி மகிழ்ந்தன ஊடகங்கள். கூருணர்வற்ற இந்தக் கொண்டாட்டங்களைப் பார்த்து கடுப்பாகி அப்போது ‘காமிய தேசத்தில் ஒருநாள்’ என்ற கதையை எழுதினேன்.

வேலைக்கென 20 மணிநேரத்தை ஒதுக்கியதுபோக எஞ்சியிருக்கும் நான்கு மணி நேரத்தையும் நொடிவாரியாக பிரித்து அதன்படி வாழ்ந்தாக வேண்டுமென்று அரசினால் கண்காணிக்கப்படும் குடிமக்களைப் பற்றிய அந்தக்கதை இந்தியாவில் மெய்யாகிவிடுமோ என்று கவலையாக உள்ளது.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

வேலைநாள் என்பது 18 முதல் 20 மணிநேரம் என்கிற இந்த அறிவிப்புக்கான உந்துதலை யோகி மோடியிடமிருந்து பெறுகிறார். மோடி பிரதமராகப் பொறுப்பேற்றதும் அவரை அதீத திறன்கள் கொண்ட மாமனிதர் அல்லது அவரே பின்னாளில் சொல்லிக்கொண்டது போன்ற அமானுஷ்யர் என்று பிம்பப்படுத்துவதற்காக பரப்பப்பட்ட பலவிதச் செய்திகளில் ஒன்று, நாட்டை முன்னேற்றுவதற்காக உழைக்கும் அவர் அன்றாடம் நான்கு மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்குகிறார் என்பதாகும். அந்தச்சமயத்தில் வெளியான ஒரு பேட்டியில் (பிஸினஸ் ஸ்டேன்டர்டு, 24 நவம்பர் 2014) அப்போதைய ஒன்றிய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பிரதமர் தானும் தூங்குவதில்லை, தனது அமைச்சர்களையும் தூங்கவிடுவதில்லை என்று கூறினார். இந்தக்கட்டத்தில் தான் 18-20 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்கிற யோகியின் அறிவிப்பு வெளியானது.

மூன்றரை மணிநேரத் தூக்கம்:

அடுத்தடுத்த ஆண்டுகளில் மோடியின் வேலைநேரம் அதிகமாகி தூக்கநேரம் குறைந்து கொண்டே வருவதாக செய்திகள் வெளியாகின. ஊடகவியலாளர்கள் யாருக்கும் பேட்டி தந்திராத மோடியை ஏஎன்ஐ நிறுவனத்துக்காக 2019 ஏப்ரல் 23 அன்று பேட்டிகண்ட பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் ‘வெறும் மூன்றரை மணிநேரத் தூக்கம் உங்களுக்குப் போதுமானதா?’ என்று வியப்புடன் கேட்டதற்கு, அந்த வியப்பை வற்றவிடாத வேகத்தில் ‘இதையேதான் ஒபாமாவும் என்னிடம் கேட்டார்’ என்று மோடியும் கூசாமல் பதிலளித்தார். 2022 நிலவரப்படி மோடி அன்றாடம் வெறும் 2 மணிநேரம் மட்டுமே தூங்கி மீதி 22 மணி நேரத்தில் ஒவ்வொரு நிமிடமும் நாட்டுக்காக உழைப்பதாக பாஜக மகாராஷ்ட்ர மாநிலத் தலைவர் சந்தரகாந்த் பாட்டீல் அதிரடியாக தெரிவித்தார் (என்டிடிவி, 21 மே 2022).

மோடியின் புகழ்பரப்ப கட்டவிழ்த்துவிடப்பட்ட இந்தப் புனைகதைகளையெல்லாம் வெளியிடுகிற ஊடகங்கள் இதெல்லாம் சாத்தியமா, தேவையா என்று கேள்வியெழுப்பி அம்பலப்படுத்தத் துணியவில்லை.

இப்படியாக, நாட்டுக்காக உழைப்பதென்றால் மோடியைப் போல வாரத்தில் ஏழுநாட்களும் இருபதுமணி நேரத்திற்கும் மேலாக ஒவ்வொரு நிமிடமும் உழைக்க வேண்டும், அது சாத்தியம் என்று கட்டமைக்கப்படும் மாயை, எழுபது வயதைத் தாண்டிய முதியவரான ஒரு பிரதமரே இப்படி உழைக்கும் போது உங்களுக்கென்ன கேடு என்கிற குத்தலான கேள்வியின் மூலம் ஒவ்வொரு உழைப்பாளி மீதும் உளவியல் தாக்குதலை நடத்துகிறது. மட்டுமன்றி, அது நாட்டின் சட்டப்பூர்வ வேலைநேரத்தை அதிகரித்துவிட வேண்டும் என்கிற சுரண்டல்வெறியை வெளிப்படுத்தும் அசட்டு தைரியத்தை இன்போசிஸ் நாராயணமூர்த்தி, எல்&டி சுப்ரமணியம் போன்ற தொழில் முதலாளிகளுக்கு வழங்குகிறது.

மோடி - அக்ஷய் குமார்
மோடி - அக்ஷய் குமார்

அன்றாடம் 20 மணிநேரம் உழைக்கிற பிரதமர் உள்ள இந்தநாட்டில் அவரில் பாதியளவாவது நாட்டுமக்கள் உழைக்கவேண்டும் என்றெண்ணியோ என்னவோ எட்டு மணிநேரம் என்றுள்ள நாட்டின் சட்டப்பூர்வ வேலைநேரத்தை 10 மணி நேரமாக்கி வாரத்திற்கு 60 மணிநேரம் வேலை செய்யவேண்டும் என்று 2020ஆம் ஆண்டு கோரிக்கை வைத்தார் நாராயணமூர்த்தி. பிறகு பிரதமரே வாராந்திர ஓய்வு விடுப்பு எடுக்காமல் 140 மணிநேரம் உழைக்கிறபோது குடிமக்களுக்கு மட்டும் எதற்கு என்று நினைத்திருப்பார் போல, அதில் பாதியளவாக வாரத்திற்கு 70 மணிநேரம் வேலை பார்க்கவேண்டும் என்று 2023 அக்டோபரில் தனது கோரிக்கையை திருத்தினார். நாராயணமூர்த்தியின் இந்தக் கோரிக்கை அறிவியல்பூர்வமற்றது அபத்தமானது என்பதையும் தனது கோரிக்கைக்கு வலு சேர்ப்பதற்காக அவர் வைத்த வாதங்கள் உண்மைக்கு மாறானவை என்பதையும் அம்பலப்படுத்தும் ஏராளமான தரவுகளுடன் கண்டனங்கள் வந்தபோதும் அவர் ‘நல்லவர்களாலும், வெளிநாடுவாழ் இந்தியர்களாலும் வெகுவாக பாராட்டப்பட்ட’ தனது கோரிக்கையினை திரும்பப் பெறப் போவதில்லை என வீம்பாக அறிவித்தார்.

5 வது இடத்தில் இந்தியா:

தொழிலாளர்கள் அமெரிக்காவில் வாரத்திற்கு 36.4 மணிநேரமும், தென் கொரியாவில் 37.9 மணிநேரமும், ரஷ்யாவில் 37.6 மணிநேரமும், பிரிட்டனில் 36 மணி நேரமும் ஜெர்மனியில் 37 மணிநேரமும் வேலைசெய்துவரும் நிலையில் இந்தியர்கள் வாரத்திற்கு சராசரியாக 47.7 மணிநேரம் வேலை செய்கிறார்கள். இதன்மூலம் உலகின் அதிகப்படியான வேலைநேரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தைப் பெறுவதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கையொன்று தெரிவிக்கிறது. (முதல் நான்கு இடங்களில் இந்திய துணைக்கண்டத்தவர் பெரும்பான்மையாக புலம்பெயர் தொழிலாளர்களாக பணிபுரியும் காம்பியா, மங்கோலியா, மாலத்தீவு, கதார் ஆகிய நாடுகள் உள்ளன.) இன்னொரு அறிக்கை 15-59 வயதுக்குட்பட்ட இந்திய நகர்ப்புறத் தொழிலாளர்கள் வேலை மற்றும் அதுசார்ந்து வாரத்திற்கு 60 மணி 47 நிமிடங்கள் அதாவது நாளொன்றுக்கு சராசரியாக 521 நிமிடங்களைச் செலவிடுவதாக தெரிவிக்கிறது. அதேவேளையில் வங்கதேசத்தைத் தவிர, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மிகக்குறைந்த சட்டப்பூர்வ ஊதியத்தைப் பெறுகிறவர்களாக இந்தியர்கள் இருக்கின்றனர் என்கிறது 2020-21 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய ஊதிய அறிக்கை.

இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி
இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி

நாராயணமூர்த்தி உபதேசிப்பதற்கும் முன்பாகவே விவசாயிகள், வியாபாரிகள், சுயதொழில் முனைவோர், தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்கள், சேவைத்துறைகள் மற்றும் இணைய வர்த்தகம் போன்றவற்றைச் சார்ந்து ஒப்பந்தக்கூலிகளாக இயங்கும் தனிநபர்கள்/ குழுக்கள், பல்வேறு முறைசாரா துறைகளின் தொழிலாளர்கள் ஆகியோர் ஏற்கனவே 12 - 14 மணிநேரம் பணியாற்றிக்கொண்டுதான் இருக்கின்றனர். இவர்களெல்லாம் நாராயணமூர்த்தி சொல்வதை விடவும் மிகக்கடினமாக உழைத்தும்கூட இவர்களது பொருளாதார நிலை உயரவில்லை. செயலி வழி இயங்கும் வாகனங்களின் ஓட்டுநர்கள் 14 மணிநேரம் பணியாற்றியும்கூட அவர்களது நாள் ஊதியம் 500 ரூபாயைத் தாண்டவில்லை என்றும், இணையவழி வர்த்தகப்பொருட்களையும் உணவுப் பண்டங்களையும் விநியோகிக்கும் ஊழியர்களும் சற்றேறக்குறைய இதேநிலையில்தான் அவதியுறுகின்றனர் என்றும் People’s Association in Grassroots Action and Movements, Indian Federation of App-based Transport Workers ஆகிய அமைப்புகள் நடத்திய ஆய்வுகளின் வழி அறியமுடிகிறது. நாட்டில் நிலவும் வேலையின்மையையும் வறுமையையும் காட்டி இத்தொழில்களில் நிலவும் உழைப்புச் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் முடிவு கட்டுவதற்காக, இந்தத் தொழில்களையும் தொழிலாளர் நலச்சட்டங்களின் வரம்புக்குள் கொண்டுவந்து இங்குள்ள தொழிலாளர்களுக்கும் 8 மணிநேர வேலை, கண்ணியமான பணியிடச்சூழல், பணிப்பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும் என்கிற குரல் எழத்தொடங்கும் இவ்வேளையில் ஒட்டுமொத்த தொழிலாளர்களது வாழ்வையும் காவுகேட்கிறார் நாராயணமூர்த்தி.

வாரத்திற்கு 90 மணிநேரம் உழையுங்கள்:

கடினமாக உழைத்தால் வாழ்க்கை மேம்படும் என்கிற பசப்பலுக்கு எதிர்நிலையாக தொழிலாளர்களது வாழ்வனுபவம் கொடியதாக இருக்கும் இந்த நிலையில்தான் மேலும் கடினமாக வாரத்திற்கு 90 மணிநேரம் உழைக்குமாறு அறைகூவல் விடுத்திருக்கிறார் எல்&டி தலைவர் சுப்ரமணியன். அதாவது வாரத்தின் ஏழுநாட்களும் நாளொன்றுக்கு சுமார் 13மணிநேரம் வேலை செய்யவேண்டுமென்றார். ஆறுநாள் வேலைசெய்தால் ஓய்வுக்கென ஊதியத்துடன் ஒருநாள் ஒதுக்கப்படுவதை சகித்துக்கொள்ள முடியாத சுப்பிரமணியன், ஞாயிற்றுக்கிழமைகளில் அப்படி எவ்வளவு நேரம்தான் மனைவியின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருப்பீர்கள் என்று பொரிந்துத் தள்ளியிருக்கிறார்.

சுப்பிரமணியன்
சுப்பிரமணியன்

இந்தியப் பெண்கள் பிறப்பெடுப்பதே ஞாயிற்றுக்கிழமைகளில் புருசனுக்கு முகத்தைக் காட்டிக் கொண்டிருப்பதற்காகத்தான் என்பதான சுப்பிரமணியனின் பின்தங்கிய இந்த வக்கிரப்பார்வைக்கு மாறானதாக இருக்கிறது உண்மை நிலவரம். 15 வயதுக்கு மேற்பட்ட இந்தியத் தொழிலாளர்களில் 32.8 சதவீதத்தினர் பெண்கள் என்கிறது ஒன்றிய அரசின் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை வெளியிட்டுள்ள Female Labour Utilization in India என்னும் அறிக்கை. பொருளீட்டுதல் மட்டுமன்றி, புருசனுக்கு முகத்தைக் காட்டிக்கொண்டிருப்பதைவிடவும் வீட்டைப் பராமரித்தல், உணவுத்தயாரித்தல், குழந்தை வளர்ப்பு, முதியோரை பேணுதல் என்று ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட ஒவ்வொருநாளும் வேறுபல முக்கிய கடமைகள் பெண்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன என்பதை சுப்ரமணியனின் ஆணாதிக்க மனம் பார்க்க மறுக்கிறது.

சரி, அப்படி ஒரு ஆண்/ பெண் தொழிலாளி தன் இணையரின் முகத்தையே பார்த்து சொக்கிப்போய் ரசித்துக் கொண்டிருந்தால்தான் இந்த சுப்பிரமணிக்கு என்ன நோக்காடு வந்தது?

அன்பும் காதலுமான ஒரு வாழ்க்கைக்காகத்தான் மக்கள் உழைக்கிறார்களேயன்றி உழைப்பதற்காக பிறக்கவுமில்லை, வாழவுமில்லை. இயந்திரங்களுக்கே கூட ஓய்வு தேவைப்படும்போது மனிதர்களை இயந்திரங்களைவிடவும் கீழ்நிலைக்குத்தள்ளி இந்த நாராயணமூர்த்திகளும் சுப்பிரமணியன்களும் எட்ட விரும்பும் இலக்கும் வளர்ச்சியும் யாருக்கானவை?

தொழிலாளர்களின் கண்ணீர் பள்ளத்தாக்கு:

‘‘பனிரெண்டு மணிநேர வேலை மிகையானது, அதைப் பதினோரு மணி நேரமாகக் குறைக்கவேண்டும், மேலும் சனிக்கிழமை வேலை இரண்டுமணியோடு முடிந்துவிட வேண்டும்... கடந்த நான்காண்டுகளாக எங்கள் நிறுவனங்களில் நாங்கள் அவற்றை முயற்சி செய்தோம், அவை நன்றாகப் பயனளிப்பதை அறிகிறோம். சராசரி உற்பத்தி வீழ்ச்சியடைவற்குப் பதிலாக உயர்ந்துள்ளது’’ என்று 1860ஆம் ஆண்டில் ஒரு முதலாளிக்கு இருந்த தெளிவு இந்த 21ஆம் நூற்றாண்டின் இந்திய முதலாளிகளுக்கு இல்லாமல் போய்விட்டது.

‘வேலை செய்யாமல் சோம்பலாக இருப்பதை ஒழிக்கும் பொருட்டும், பெருமிதம் மற்றும் விடுதலை உணர்வைத் திசைதிருப்புவதற்கும், ஏழைகளை ‘‘சிறந்த தொழிலகங்களில்’’ அடைக்கவேண்டும் என்று தொழிற்துறை குறித்த கட்டுரைகளின் ஆசிரியர் முன்மொழிகிறார். அந்தத் தொழிலகங்கள் பயங்கரமானவையாக இருக்கவேண்டும், அங்கு நாள் ஒன்றுக்குப் பதினான்கு மணிநேரம் வேலை வாங்கப்பட வேண்டும், உணவுக்காக கழித்தது போக, முழு பனிரெண்டு மணிநேரம் மீதமாக வேண்டும். நாள் ஒன்றுக்குப் பனிரெண்டு மணிநேர வேலை, அதுதான் 18ஆம் நூற்றாண்டு மனிதாபிமானிகள் மற்றும் நியாயவாதிகளின் இலட்சியமாக இருந்தது.

உழைப்பை ஒழித்தல்
உழைப்பை ஒழித்தல்

இந்தத் தீவிர மனிதாபிமானிகளைவிட நாம் எவ்வளவு தூரம் பின்தங்கியிருக்கிறோம் பாருங்கள்!’ என்று 19ஆம் நூற்றாண்டின் இறுதியாண்டுகளில் எழுதிய பால் லபார்க் ( பிரான்ஸ் கம்யூனிஸ்ட் மற்றும் கார்ல் மார்க்ஸின் மருமகன்), இந்த பூமி தொழிலாளர்களின் கண்ணீர் பள்ளத்தாக்காக இருப்பதை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்றார். அது உலகின் பலபாகங்களில் ஓரளவுக்கு சாத்தியமுமானது.

ஆனால் இந்திய முதலாளிகளும் ஆட்சியாளர்களும் இந்த நாட்டை தொழிலாளர்களின் கண்ணீர் பள்ளத்தாக்காகவே வைத்துக்கொள்ள முயற்சித்துக்கொண்டுள்ளனர்.

முதலாளிய ஆதரவாளர்கள் நடப்புக்காலத்தை ஐந்தாம் தலைமுறை தொழிற்புரட்சிக்காலம் என்ற அலங்காரமாக சொல்லிக்கொண்டாலும் இந்திய முதலாளிகள் 18ஆம் நூற்றாண்டுக்குரிய - முதலாம் இரண்டாம் தொழிற்புரட்சிக் காலத்திய ஈவிரக்கமற்ற சுரண்டல் உரிமையையே விரும்புகிறார்கள். அதற்கிசைவாக ஆட்சியாளர்களை ஆட்டுவித்து தொழில் மற்றும் தொழிலாளர் நலன் சார்ந்த சட்டங்களைத் திருத்துகிறார்கள். 18, 19ஆம் நூற்றாண்டுகளில் இருந்ததைப் போன்ற - சூரியன் உதிப்பதையும் மறைவதையும் பார்த்தறியவே இயலாதபடி தொழிலாளர்களின் வேலை நேரத்தைக் கூட்ட வேண்டுமெனக் கொக்கரிக்கிறார்கள்.

Work-Life Balance:

உலகளாவிய அளவில், 2016ஆம் ஆண்டு வாரத்திற்கு 55 மணிநேரம் வேலைசெய்த தொழிலாளர்களில் 3,98,000 பேர் பக்கவாதத்தாலும் 3,47,000 பேர் இருதயநோய் பாதிப்பினாலும் மாண்டுபோனார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் கொடுத்த எச்சரிக்கையிலிருந்து எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ள மறுத்து வேலைநேரத்தை இரட்டிப்பாக்க வேண்டுமெனும் கொடூரமான யோசனைகளை முன்வைக்கிறார்கள். எட்டுமணி நேர வேலை நாளுக்காக உலகெங்கும் போராடியவர்களின் தியாகத்தையும், இங்கு அந்த உரிமைக்கு வழியமைத்த அண்ணல் அம்பேத்கரின் பங்களிப்பையும் உதாசீனம் செய்யும் அவர்கள், அதிகப்படியான நேரம் வேலை செய்வதால் உண்டாகும் உடல்நலக்கேடு, உளவியல் பிரச்னைகள் காரணமாக நாட்டின் குடிமக்களில் பெரும்பகுதியினரை இயல்பான மனிதவாழ்வுக்கு தகுதியற்றவர்களாக மாற்றுவதற்கும் துணிந்திருக்கிறார்கள்.

உழைப்பாளர்கள்
உழைப்பாளர்கள்

வேலையையும் எஞ்சிய தனிப்பட்ட வாழ்வையும் (Work-Life Balance) ஒன்றுக்கொன்று முரணில்லாத வகையில் அமைத்துக்கொள்வதற்கான தொழிலாளர் உரிமை பற்றிய விவாதங்கள் உலகெங்கும் நடந்துவரும் காலமிது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இசைவான விகிதத்தில் வேலைநேரமும் வேலைநாட்களும் குறைக்கப்பட்டு தொழிலாளர்களது வாழ்க்கைத்தரம் சமகாலத் தன்மையுடையதாய் மேம்பட வேண்டும் என்ற இலக்கையும் உள்ளடக்கியது இவ்விவாதம். வாழ்வின் அனைத்து இன்பங்களையும் துய்ப்பதற்கான கற்பனையும் விருப்பமும் வாய்ப்பும் சுதந்திரமும் தொழிலாளர்களுக்கு உண்டு. அதற்கிசைவாகவே எட்டு மணிநேரம் வாழ்வாதாரத்திற்காகவும் எட்டு மணிநேரம் வாழ்வதற்காகவும் எட்டு மணிநேரம் உறங்குவதற்காகவுமாக ஒவ்வொரு நாளையும் பகுத்துக்கொண்டுள்ளோம். இதில் நமது எந்தவொரு நொடியையும் யாரிடமும் இழக்கவும் கூடாது, இரவல்தரவும் முடியாது.

“ஓ! ஓய்வே,

வேலை என்னும் இந்த நீங்காத் துயரத்திலிருந்து மீள்வதற்குக் கருணை காட்டு!

ஓ! ஓய்வே,

கலைகளின் தாயே,

உயர்ந்த விழுமியங்களின் தாயே,

மனித இனத்தின் வலிகளுக்கு நீ தைலமாக இரு!”

மேற்கோள்கள்:

உழைப்பை ஒழித்தல் , பால் லபார்க் & பாப் பிளாக்

Seventy-Hour Working Week: A Reflection of Capital's Essence, R Karumalaiyan

''மனைவிக்கு அதிகாரம் கொடுக்காதீர்கள்...'' - யுவராஜ் சிங் தந்தையின் கருத்து, நெட்டிசன்கள் கொதிப்பு!

தலைசிறந்த கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தையான முன்னாள் கிரிக்கெட் வீரர் யோக்ராஜ் சிங், யூடியூப் நேர்காணல் ஒன்றில் இந்தி மொழியை கேலி செய்தும் பெண்கள் குறித்து பாலியல்ரீதியான கருத்துகளை பேசியும் ... மேலும் பார்க்க

`எம் பிள்ளை... எங்க அம்மா... என்ன விட்டு போக முடியாது’ - கலங்க வைக்கும் காந்திமதி யானையின் இழப்பு

`காந்திமதி யானை'தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் குறிப்பிடதக்க ஒன்று நெல்லையப்பர் கோயில். நெல்லையப்பர் கோயிலில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களிலும் யானை காந்திமதி முன் செல்வது வழக்கம். ந... மேலும் பார்க்க

தன்னைத்தானே வாடகைக்கு விட்டு, ரூ.69 லட்சம் வருமானம்; ஜப்பான் இளைஞரின் `அடேங்கப்பா' தொழில்!

ஜப்பானைச் சேர்ந்த 41 வயதான Shoji morimoto என்பவர் ஒன்றும் செய்யாமல் தன்னை வாடகைக்கு விடுவதற்கு மிகவும் பிரபலமானவர். 2018 ஆம் ஆண்டில் முன்முயற்சி இல்லாமல் பணி செய்ததால் அலுவலகத்தில் இருந்து நீக்கப்பட்ட... மேலும் பார்க்க

Vikatan Weekly Quiz: மோடி பாட்காஸ்ட் பேட்டி டு ட்ரம்ப் `தண்டனை’ - இந்த வார கேள்விகளுக்கு தயாரா?

எல் அண்ட் டி தலைவர் பேச்சு, இஸ்ரோவின் புதிய தலைவர், மதகஜராஜாரிலீஸ், ட்ரம்ப் தண்டனை என இந்த வாரத்தில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் அரங்கேறியிருக்கின்றன. அவற்றின் கேள்வித் தொகுப்பாக இந்த வார விகடன் weekly... மேலும் பார்க்க

ஜெயச்சந்திரன் : `அவர் என் தாய்மாமா; அவருக்கு கடைசி வரை மரண பயம் இல்லை' - பின்னணிப் பாடகி சுனந்தா!

பாடகர் ஜெயச்சந்திரன். சுமார் 60 ஆண்டுகளாக பாடகராக பயணம்; கிட்டத்தட்ட 16,000 பாடல்கள் வரை பாடியுள்ளார். தன்னுடைய குரல் வளத்துக்காகவும், பாடல் வரிகளுக்கான உணர்வுகளை அப்படியே தன்னுடைய குரலில் பிரதிபலித்த... மேலும் பார்க்க