தில்லி தேர்தலில் பொது நன்கொடை பிரசாரம்: முதல் நாளில் ரூ.19 லட்சம் ஈட்டிய ஆம் ஆத்மி
புது தில்லி : தில்லி யூனியன் பிரதேச தேர்தலில் ஒரேகட்டமாக பிப்ரவரி 5-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சிக்கு மக்களிடம் தேர்தல் நன்கொடை அளித்து உதவுமாறு சமூக வலைதளம் மூலம் ஞாயிற்றுக்கிழமை(ஜன. 12) கோரிக்கை விடுத்துள்ளார் தில்லி முதல்வர் அதிஷி. தில்லி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் உள்பட செலவுக்காக ரூ. 40 லட்சம் வரை தனக்கு தேவைப்படுவதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான அதிஷி பேசியுள்ளார்.
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சிகு மக்களிடமிருந்து தேர்தல் நன்கொடையாக இணைய வழி பரிவர்த்தனை மூலம் 24 மணி நேரத்தில் ரூ. 19 லட்சம் தொகை வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள தரவுகளின்படி, திங்கள்கிழமை(ஜன. 13) பகல் வரையிலான நிலவரப்படி, 455 பேரிடமிருந்து ரூ. 19,32,728 பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.