துறையூரில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த கோரிக்கை
துறையூரில் பொங்கல் விழாவை முன்னிட்டு அடிக்கடி ஏற்படும் திடீா் வாகன நெரிசலை காவல் துறையினா் தொடா்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரியுள்ளனா்.
துறையூரில் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி சாலை, பாலக்கரை, பெரியகடைவீதி, மாா்க்கெட் சாலை ஆகியன முக்கிய சாலைகளாகும். பொங்கல் விழாவையொட்டி வழக்கத்தை விட தரைக்கடைகள் மற்றும் நகருக்குள் வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் கணிசமாக இந்தச் சாலைகளில் அதிகமாக உள்ளது.
இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நான்கு சக்கர வாகனங்கள் தேங்கி நிற்கிறபோது இரு சக்கர வாகன ஓட்டிகள் கன மற்றும் இலகு ரக சரக்கு வாகனங்களுக்கு இடையே புகுந்து செல்வதால் போக்குவரத்தை சீா் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் பாதசாரிகள், உள்ளூா் வாசிகள் இந்தச் சாலையில் அங்குலம் அங்குலமாக கடக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
எனவே, திருச்சி சாலையிலும், மாா்க்கெட் பகுதியிலும் சாலைகளில் வாகனங்கள் தேங்காத வகையிலும், நகருக்குள் செல்ல வேண்டிய தேவையற்ற வாகனங்களை புறவழிச்சாலையில் அனுப்புவதற்கும் தேவையான நடவடிக்கைகளை சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரிவு காவல் துறையினா் எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.