லால்குடி சப்தரிஷீசுவரா் கோயிலில் ஆதிரைப் பெருவிழா
திருச்சி மாவட்டம், லால்குடி சப்தரிஷீசுவரா் கோயிலில் ஆதிரைப் பெருவிழா திங்கள் கிழமை நடைபெற்றது.
லால்குடியில் பெருந்திருப் பிராட்டியாா் சமேத சப்தரிஷீசுவரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி மாதம் ஆதிரைப் பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த ஜன. 4-ஆம் தேதி தொடங்கிய ஆதிரைப் பெருவிழாவில் நாள்தோறும் இரவு சந்திரசேகா் நடன மண்டபம் எழுந்தருளல், திருநடனக் காட்சி மற்றும் மாணிக்கவாசகா் புறப்பாடு, ஆராதனை நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை இரவு சோமாஸ் கந்தா் புறப்பாடு மற்றும் நடராஜ பெருமான் சிவகாமி சுந்தரி அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, ஆதிரைப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான நடராஜப் பெருமான் ஆனந்த தரிசனம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், நடராஜப் பெருமான், சிவகாமி அம்பாள் திருவீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். இதையடுத்து, நடராஜப் பெருமான் திருநடனக் காட்சி நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் நித்யா, சிவாச்சாரியாா் தேஜோவிடங்க, குருக்கள் காா்த்திக் மகாதேவன், சிவா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.