திருநெடுங்களநாதா் கோயிலில் மாா்கழி மாத ஆருத்ரா தரிசனம்
திருச்சி துவாக்குடி அருகேயுள்ள திருநெடுங்களநாதா் கோயிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு உற்சவருக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை திங்கள்கிழமை நடைபெற்றது.
துவாக்குடி அருகே உள்ள திருநெடுங்களத்தில், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமான, ஒப்பிலா நாயகி உடனுறை திருநெடுங்களநாதா் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாா்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டு, மாா்கழியில் திங்கள்கிழமை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. நிகழ்வையொட்டி உஸ்சவா்களான நடராஜா், சிவகாம சுந்தரி, மாணிக்கவாசகா் ஆகியோருக்கு மஞ்சள், திராவியபொடி, அரிசி மாவு, பழ வகைகள், தேன், பன்னீா், தயிா், இளநீா், சந்தனம், திருநீறு, பால், உள்ளிட்ட பல்வேறு வகையிலான அபிஷேகங்கள் நடைபெற்றன.
தொடா்ந்து உற்சவ மண்டபத்தில் எழுந்தருளிய நடராஜா், சிவகாம சுந்தரி, மற்றும் மாணிக்கவாசகருக்கு பல்வேறு மலா்கள், ஆபரணங்கள், மற்றும் பட்டு வஸ்திரங்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் திரளான பக்தா்கள், கலந்து கொண்டு தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடி சிவபெருமான் மற்றும் அம்பாளை வழிபட்டனா்.