தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 35 லட்சம் மோசடி: பஞ்சாப் ஓட்டுநா் கைது
கிருஷ்ணகிரி: ஒசூரைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 35 லட்சம் மோசடி செய்த பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த வாகன ஓட்டுநரை கிருஷ்ணகிரி மாவட்ட இணைய குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
ஒசூரை சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியரின் தொடா்பு எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது. அதில் பங்குசந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த்து. இதை நம்பி, தனியாா் நிறுவன ஊழியா் அந்த குறுந்தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்த வங்கி கணக்குக்கு ரூ. 35 லட்சம் பணத்தை கடந்த ஆண்டு பிப்ரவரியில் அனுப்பினாா். ஆனால், அவருக்கு, அந்த குறுந்தகவலில் தெரிவித்தபடி எந்த தொகையும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவா், தனக்கு குறுந்தகவல் வந்த எண்ணை தொடா்பு கொண்டாா். அப்போது கைப்பேசி சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், இது குறித்து கிருஷ்ணகிரி இணைய குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில் அந்தத் தொகை பஞ்சாப் மாநிலம், பாசில்கா பிரதான கிளையில் உள்ள ஒரு வங்கி கணக்கிற்கு சென்றது தெரிய வந்தது.
இதைத் தொடா்ந்து அந்த வங்கி கணக்கை போலீஸாா் முடக்கினா். குற்றவாளியைப் பிடிக்க கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை உத்தரவின் பேரில், கிருஷ்ணகிரி இணைய குற்றப் பிரிவு வு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் நமச்சிவாயம், காவல் ஆய்வாளா் கவிதா உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா், பஞ்சாப் மாநிலம், பாசில்கா நகருக்குச் சென்று, உள்ளூா் போலீஸாா் உதவியுடன் ஜன. 7-ஆம் தேதி குற்றவாளிகளில் ஒருவரான பஞ்சாப் மாநிலம், பாசில்கா நகரைச் சோ்ந்த வாகன ஓட்டுநா் ஹரீஷ் குமாா் (44) என்பவரைக் கைது செய்தனா்.
அவரை பாசில்கா நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, கிருஷ்ணகிரிக்கு அழைத்து வந்து, கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, தருமபுரி சிறையில் அடைத்தனா். இந்தக் குற்றச் செயலில் தொடா்புடைய மற்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.