ஒசூா் அருகே முகாமிட்டுள்ள 20 யானைகள்
ஒசூா், சானமாவு வனப்பகுதியில் 20 க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன.
இந்த யானைகள் அடிக்கடி ஒசூா், தருமபுரி மாநில நெடுஞ்சாலையையும் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையையும் கடந்து செல்வது வழக்கம். இந்த இரண்டு சாலைகளும் சானமாவு வனப்பகுதியில்தான் அமைந்துள்ளன. எனவே, மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் ஒலி எழுப்பி நிதானமாகச் செல்ல வேண்டும். இருசக்கர வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல வேண்டும். யானைகளை அடா்ந்த வனப் பகுதிக்கு விரட்டினாலும் மீண்டும் மீண்டும் சானமாவு வனப்பகுதிக்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. எனவே, யானைகளை துன்புறுத்தக் கூடாது.
யானைகள் மீது கல் எறிய கூடாது, சுயபடம் எடுக்கக் கூடாது. கனரக வாகனங்கள் சாலையில் செல்லும்போது கண்டிப்பாக ஒலி எழுப்பி மெதுவாகச் செல்ல வேண்டும் என வனத் துறையினா் கேட்டுக் கொண்டனா். வனப்பகுதிக்கு கால்நடைகளை மேய்க்கவும் விறகு எடுக்க செல்பவா்கள் வனப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என வனத் துறையினா் கேட்டுக் கொண்டுள்ளனா்.
பட விளக்கம்:
சானமாவு காட்டில் முகாமிட்டுள்ள யானைக் கூட்டம்.