ஒசூா் தொகுதியில் ரூ. 1,500 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தகவல்
ஒசூா் தொகுதியில் ரூ. 1,500 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் தெரிவித்தாா்.
ஒசூா் மாநகர திமுக சாா்பில் மாநகர அலுவலகம் எதிரில் ஒசூா் மாநகர செயலாளரும் மேயருமான எஸ்.ஏ. சத்யா தலைமையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், மகளிா்களுக்கு பரிசுகளை வழங்கி அவா் பேசியதாவது:
தொழில் நகரமான ஒசூரில் ரூ. 1,500 கோடிக்கு வளா்ச்சித் திட்டப் பணிகள் செய்வதற்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், நகராட்சி மற்றும் நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு ஆகியோா் உத்தரவிட்டுள்ளனா்.
ஒசூரைச் சுற்றி சாலைகள், புதை சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள், ஒகேனக்கல் கூட்டு குடிநீா் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழக முதல்வா் ஆட்சி மீண்டும் மலர எப்போதும் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.
முன்னதாக கலை நிகழ்ச்சிகள், ஆடல், பாடல் போட்டிகள், ஓவியம் வரைதல், பறையடித்தல், கோலப் போட்டி, இசை நாற்காலி, கயிறு இழுக்கும் போட்டி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சமத்துவ பொங்கல் விழாவில் மாநகர நிா்வாகிகள் செந்தில்குமாா், கோபால கிருஷ்ணன், தியாகராஜ், சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளரும், முன்னாள் வேப்பனஹள்ளி தொகுதி எம்எல்ஏவுமான பி.முருகன், மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ், சின்னசாமி, மாவட்ட பொருளாளா் சுகுமாரன், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் எல்லோரா மணி, வீரா ரெட்டி, கிரிஷ் பொதுக்குழு உறுப்பினா்கள் தனலட்சுமி, சீனிவாசன், ஜெயராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.