மதுரை: பாஜக மாநில நிர்வாகியை போக்சோ வழக்கில் கைதுசெய்த போலீஸ்! - என்ன நடந்தது?
சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பாஜக மாநில நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம், மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பாஜக பொருளாதார பிரிவு மாநிலத் தலைவரான எம்.எஸ்.ஷா, மதுரை திருமங்கலம் பகுதியில் செயல்படும் பிரபல கல்லூரியின் தலைவராக இருந்து வருகிறார். ஆரம்ப காலத்தில் அதிமுக-வில் இருந்தவர், சில ஆண்டுகளுக்கு முன் பாஜக-வில் இணைந்து, முக்கிய நிர்வாகிகளுக்கு நெருக்கமாகி கட்சியில் செல்வாக்குடன் வலம் வந்தார்.
இந்நிலையில்தான் கடந்த ஆண்டு எம்.எஸ்.ஷா மீது ஒருவர் கொடுத்த புகாரில் "என் மனைவியுடன் தொடர்பில் இருந்த எம்.எஸ்.ஷா, பள்ளியில் படிக்கும் என் மகளின் செல்போனுக்கு ஆபாச உரையாடல்கள் தொடர்ந்து அனுப்பி வந்தார், இதுகுறித்து மகளிடம் விசாரித்தபோது, என் மனைவி, எம்.எஸ்.ஷா இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று, அந்த அறிமுகத்தில் வாட்ஸ் அப் மூலமாக ஆபாசமாக பேசி டார்ச்சர் செய்துள்ளார். கூப்பிடும் இடத்திற்கு வந்து தன்னுடன் தங்கினால் பைக் வாங்கித் தருகிறேன் என அழைத்துச்சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதற்கு என் மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார்" என்று புகாரில் கூறியிருந்தார்.
இப்புகாரின் அடிப்படையில் பாஜக நிர்வாகி எம்.எஸ்.ஷா மீதும் சிறுமியின் தாய் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், அப்போதைய போலீஸ் விசாரணை அதிகாரிகள் புகாரில் முகாந்திரம் இல்லை என்று வழக்கை முடித்து வைத்தனர்.
மீண்டும் சிறுமியின் தந்தை நீதிமன்றத்தில் முறையிட்டதால் மதுரை போலீஸ் கமிஷனர், மீண்டும் வழக்கை விசாரிக்க உத்தரவிட்டதன் அடிப்படையில் பாஜக மாநில நிர்வாகி எம்.எஸ்.ஷா மற்றும் சிறுமியின் தாயார் இருவரையும் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர்.
மதுரை மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதில் இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
எம்.எஸ்.ஷா, பாஜக மாநில தேசியத் தலைவர்களோடு நெருக்கமாக இருந்தது மட்டுமன்றி, மதுரை மாவட்டத்திலுள்ள அரசு உயரதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு நெருக்கமாக இருந்து வந்ததால் கடந்த வருடம் இப்புகார் வந்தபோதே, தன் மீது நடவடிக்கை எடுக்காமல் பார்த்துக் கொண்டதோடு, புகார் கொடுத்த சிறுமியின் தந்தைக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். தற்போது சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏறட்டுள்ள பாதிப்பால் தமிழக அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் விளைவால் தற்போது எம்.எஸ்.ஷா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.