சர்ச் தேர்தல் முன்விரோதம்; பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா காரை உடைத்த திமுக நிர்வாகி கைது!
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள கல்குறிச்சியில் புனித சூசையப்பர் கத்தோலிக்க ஆலயம் உள்ளது. இந்த சர்ச்சின் பங்குதந்தையாக பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா உள்ளார். குழித்துறை மறைமாவட்டத்துக்குட்பட்ட இந்த ஆலயத்தின் பங்கு பேரவைக்கான தேர்தல் நேற்று முன்தினம் தக்கலை புனித எலியாசியார் ஆலய வளாகத்தில் வைத்து நடத்தப்பட்டது. இதில் இரண்டு அணிகள் போட்டியிட்டதில் ஒரு அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் அன்று இரவு தோல்வி அடைந்த அணியை சேர்ந்த சிலர், கல்குறிச்சியில் உள்ள பங்குதந்தையின் இல்லத்திற்கு சென்று அங்கிருந்த பங்குதந்தையிடம் தகராறு செய்துள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த அவர்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த பங்குதந்தை காரின் முன்பக்க, பின்பக்க கண்ணாடிகளை கல்லால் உடைத்தனர். செய்தியை அறிந்த ஊர் மக்கள் பங்குதந்தையின் இல்லத்திற்கு முன்பு திரண்டனர். இதை பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
இச்சம்பவம் குறித்து அறிந்த தக்கலை டி.எஸ்.பி பார்த்தீபன், இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி மற்றும் போலீஸார் சம்பவ இடம் சென்று பங்குதந்தையிடம் விசாரணை மேற்கொண்டனர். அதற்கு பங்கு பேரவை தேர்தலில் தோல்வியடைந்த அணியை சேர்ந்த தி.மு.க. மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளரான ராஜேந்திர ராஜ் மற்றும் சிலர் வந்து தன்னிடம் தகராறு செய்து கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக அப்போது பங்குதந்தை ஜார்ஜ் பொன்னையா போலீஸாரிடம் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு ராஜேந்திர ராஜ் (வயது 59), ஏங்கல்ஸ் (வயது 47), ஜஸ்டின் (வயது 45) மற்றும் கண்டால் தெரியும் 3 - பேர் என 6 - பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
தப்பிச் சென்ற குற்றவாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த நிலையில் ராஜேந்திர ராஜ், ஜெஸ்டின் ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர். தலைமறைவான இன்னும் சிலரைப் பிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பாரதமாதா, பிரதமர் மோடி குறித்து கடுமையாக விமர்சித்து காவல்துறை கைது நடவடிக்கைக்கு ஆளாகி 2021-ம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா என்பது குறிப்பிடத்தக்கது.