``மன அழுத்தத்தைக் குறைக்க வகுப்பு எடுத்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை'' -ஈரோட்டில் சோகம்
ஈரோடு மாவட்டம், அரச்சலூர் வீரப்பன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு காவல் துறையில் காவலராக சேர்ந்து, பின்னர் உதவி ஆய்வாளர் பணிக்குத் தேர்வு எழுதி 2017-ஆம் ஆண்டு முதல் உதவி ஆய்வாளராக தனிப் பிரிவில் பணியாற்றி வந்தார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஈரோடு நகர காவல் நிலையத்தில் பணிமாறுதல் பெற்று பணியாற்றி வந்தார். இந்நிலையில், அரச்சலூரில் உள்ள தனது வீட்டில் இன்று தூக்கிட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சசிகுமார் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில், "உயிரிழந்த உதவி ஆய்வாளர் சசிகுமார் மனைவி வெள்ளோடு காவல்நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இறந்த சசிகுமார் காவலர்களுக்கான மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலும் புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகுப்பை கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து எடுத்து வந்தார். வீட்டில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் புதிதாக வங்கியில் கடன் பெற்று வீடு கட்டியுள்ளார். இதில், மன அழுத்தத்தில் இருந்த சசிகுமார் தற்கொலை செய்துகொண்டுள்ளது முதற்கட்டமாக தெரியவந்துள்ளது" என்றனர்.
காவலர்களுக்கு மன அழுத்தத்தைக் குறைக்கும் வகுப்பு எடுத்த வந்த உதவி ஆய்வாளர் தற்கொலை செய்துகொண்டது ஈரோட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.