ஜம்மு-காஷ்மீர்: எதிர்பாராத விதமாக துப்பாக்கி சுட்டதில் வீரர் காயம்
தங்கையை காதலித்தவரை கத்தியால் குத்திக் கொன்ற அண்ணன்... சிவகாசியில் பரபரப்பு!
சிவகாசியில், தங்கையை காதலித்த நபரை அண்ணன் குத்தி கொன்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "சிவகாசி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்தவர் வீர மாணிக்கம் (வயது 18). இவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் இவர் ஒரே சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 16 வயது மைனர் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் சிறுமியின், 17வயது அண்ணனுக்கு தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, வீர மாணிக்கத்தை அழைத்து, எனது தங்கையை காதலிக்க கூடாது கண்டித்துள்ளார். ஆனாலும் அந்த சிறுமியும், வீர மாணிக்கமும் தொடர்ந்து காதல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் அண்ணன் வீரமாணிக்கத்தை குத்தி கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
இதற்காக கையில் கத்தியை மறைத்து வைத்துக்கொண்டு வீர மணிக்கத்தை தேடிச்சென்றுள்ளார். அப்போது செல்லும் வழியில் டூவீலரில் பழுதடைந்த செயினை சரி செய்யும் பணியில் வீர மாணிக்கம் ஈடுபட்டிருப்பதை பார்த்துள்ளார். அவர் அருகே சென்றதும், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வீரமாணிக்கத்தை குத்தி விட்டு அங்கிருந்து சிறுமியின் அண்ணன் தப்பி ஓடிவிட்டார். எதிர்பாராத நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது அதேசமயம் கத்திக் குத்தால் காயமடைந்து உயிருக்கு போராடிய வீர மாணிக்கத்தை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அக்கம் பக்கத்தினர் அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் வீர மாணிக்கம் உயிரிழந்தார்.
இதற்கிடையில் வீர மாணிக்கத்தை குத்திய சம்பவத்தில் ஈடுபட்ட சிறுமியின் அண்ணனான 17 வயது நபரை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் சிவகாசி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றனர்.