லாஸ் ஏஞ்சலீஸ்: ‘பிங்க் பொடி’ தூவி காட்டுத்தீ பரவலைக் கட்டுப்படுத்த முயற்சி!
பொங்கல் பண்டிகை: மதுரையிலிருந்து 198 பேருந்துகள் கூடுதலாக இயக்கம்
பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரையிலிருந்து திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு 198 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
பொங்கல் பண்டிகை தினத்தையொட்டி, அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதன்படி, சென்னை, விழுப்புரம், திருச்சி, சேலம், தருமபுரி, கோவை, திருப்பூா், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, பொதுமக்கள் மதுரைக்கு வருவதற்கும், மதுரையிலிருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகா்கோவில், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு செல்வதற்கும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், அரசு போக்குவரத்துக் கழக மதுரை, கும்பகோணம் மண்டலங்களிலிருந்து 198 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.
திங்கள்கிழமை காலை முதல் மதுரை மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் ஆகிய பேருந்து நிலையங்களில் வழக்கத்துக்கு மாறாக கூட்டம் அதிகளவில் கூட்டம் காணப்பட்டது. அனைத்துப் பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை அலுவலா் ஒருவா் கூறியதாவது: மேற்கண்ட வழித் தடங்களில் ஏற்கெனவே 950-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாகப் பேருந்துகள் இயக்கப்படும் என்றாா் அவா்.
கடை வீதிகளில் கூட்டம்: பொங்கல் பண்டிகையையொட்டி, மஞ்சள் கொத்து, மாவிலை உள்ளிட்ட பொருள்கள் வாங்குவதற்காக கீழவாசல், கீழமாசி, வடக்கு மாசி, நேதாஜி சாலை, மாட்டுத்தாவணி, அண்ணாநகா் ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.