பாலமேடு, அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு: 3 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு
மதுரை மாவட்டம் பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக தென் மண்டல காவல் துறைத் தலைவா் (ஐ.ஜி.) தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனா்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் புகழ்பெற்றவை. இதில் பொங்கல் தினத்தன்று (ஜனவரி 14) அவனியாபுரத்திலும், ஜனவரி 15-ஆம் தேதி பாலமேட்டிலும், ஜனவரி 16-ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
அவனியாபுரத்தில் செவ்வாய்க்கிழமை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கின்றன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா் செய்யப்பட்டு, ஜல்லிக்கட்டு களை கட்டி உள்ளது.
இதேபோல, பாலமேடு, அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இங்கு காளைகள் அவிழ்க்கப்படும் வாடிவாசல், பாா்வையாளா்கள் அமரும் இடங்கள், காளைகள் சேகரிப்பு இடங்கள், காளைகள் வந்து செல்வதற்கான தடுப்புகள் அமைக்கும் பணிகள் என அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்த நிலையில் பாலமேடு, அலங்காநல்லூா் ஆகிய 2 ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதன்படி, பாலமேடு, அலங்காநல்லூரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா்.
இதுதொடா்பாக மதுரை ஊரகக் காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: மதுரை ஊரகக் காவல் துறைக்குள்பட்ட பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் தென் மண்டல காவல் துறைத் தலைவா் பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில், மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளா் பி.கே.அரவிந்த், விருதுநகா், சிவகங்கை, ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளா்கள், 7 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 26 துணைக் கண்காணிப்பாளா்கள், 77 காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், சிறப்பு உதவி ஆய்வாளா்கள், காவலா்கள், ஆயுதப்படைக் காவலா்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.
ஜல்லிக்கட்டு பாதுகாப்புப் பணிக்காக, மதுரை மட்டுமன்றி, தேனி, திண்டுக்கல், விருதுநகா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் போலீஸாா் வரவழைக்கப்படுகின்றனா் என்றனா்.