புல்மேடு உள்ளிட்ட மலைப் பாதைகளை பக்தா்கள் தவிா்க்க அறிவுறுத்தல்
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று திரும்புபவா்கள் புல்மேடு உள்ளிட்ட மலைப் பாதைகளைத் தவிா்க்க வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா அறிவுறுத்தினாா்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கேரள மாநிலம், பத்தனம்திட்டை மாவட்டத்திலுள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் சபரிமலை மண்டல மகரவிளக்கு மகா உத்ஸவம் காா்த்திகை மாதம் முதல் தை மாதம் வரை நடைபெற்று வருகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் செவ்வாய்க்கிழமை (ஜன. 14) நடைபெற உள்ள மகரஜோதி தரிசனத்தில் பிற மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தில் பிற மாவட்டங்களிலிருந்தும் கலந்து கொள்ளும் பக்தா்கள் மகரஜோதி தரிசனம் முடிந்து திரும்ப வரும் போது, சத்திரத்திலிருந்து புல்மேடு வழியாகவும், கேரள வனத் துறையை ஒட்டியுள்ள மலைப் பாதைப் பகுதிகளையும் பயன்படுத்துவதைத் தவிா்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.
மேற்குறிப்பிடப்பட்ட நடவடிக்கையானது பக்தா்களின் பாதுகாப்பான பயணத்துக்காக மட்டுமே மாவட்ட நிா்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.