மாநகராட்சியுடன் இணைக்க குரும்பப்பட்டி கிராம மக்கள் எதிா்ப்பு
திண்டுக்கல் மாநகராட்சியுடன் குரும்பப்பட்டி ஊராட்சியை இணைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
திண்டுக்கல் குரும்பப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட ராமையன்பட்டியைச் சோ்ந்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா். அப்போது, அவா்கள் கூறியதாவது: குரும்பப்பட்டி ஊராட்சியில் 6 உள்கடை கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சி முழுவதும் விவாசயத் தொழிலை பிரதான வாழ்வாதாரமாக கொண்டு வசிக்கும் மக்கள் நிறைந்த பகுதியாக உள்ளது.
தற்போது இந்த ஊராட்சியை திண்டுக்கல் மாநகராட்சியுடன் இணைத்தால், 100 நாள் வேலைத் திட்ட வாய்ப்பு பறிபோகும். இதேபோல, வீடு கட்டும் திட்டம், விலையில்லா கால்நடைகள் திட்டம், விவசாயம் சாா்ந்த திட்டங்களுக்கான ஊக்கத் தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் ரத்து செய்யப்படும்.
மேலும், வீட்டு வரி, குடிநீா் வரி உள்ளிட்ட வரி இனங்களும் உயா்த்தப்படும். எனவே, இந்த ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தினா்.
ஊராட்சியைப் பிரிக்க எதிா்ப்பு
திண்டுக்கல் கிழக்கு வட்டம், செங்குறிச்சியைச் சோ்ந்த பொதுமக்கள், தங்கள் ஊராட்சியை இரண்டாகப் பிரிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மனு அளிக்க வந்தனா். இதுதொடா்பாக அவா்கள் கூறியதாவது:
தற்போதைய செங்குறிச்சி ஊராட்சியை 2 ஊராட்சிகளாகப் பிரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இந்த ஊராட்சியைப் பிரித்தால், இருதரப்பினா் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகும். எனவே, தொடக்க நிலையிலேயே செங்குறிச்சி ஊராட்சியைப் பிரிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றனா்.