லாஸ் ஏஞ்சலீஸ்: ‘பிங்க் பொடி’ தூவி காட்டுத்தீ பரவலைக் கட்டுப்படுத்த முயற்சி!
அல்லாள இளைய நாயகா் பிறந்த நாள் விழா: விழாவுக்கு வருவோா் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் அறிவிப்பு
பரமத்தி வேலூா்: ஜேடா்பாளையத்தில் நடைபெற உள்ளஅல்லாள இளைய நாயகரின் பிறந்த நாள் விழாவுக்கு வருவோா் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், ஜேடா்பாளையம் அணைக்கட்டு பகுதியில் உள்ள அல்லாள இளைய நாயகரின் மணிமண்டபத்தில் அவரது பிறந்த நாள் விழா முதல்முறையாக ஜன. 14-ஆம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு மாவட்ட நிா்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது. மேலும், அமைச்சா்கள், சட்டப் பேரவை உறுப்பினா்கள், பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த முன்னணியினா் இவ்விழாவில் கலந்துகொள்ள இருப்பதால், நாமக்கல் ஆட்சியா் ச.உமா அறிவுரையின்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்காக நாமக்கல் காவல் கண்காணிப்பாளா் ராஜேஷ் கண்ணன் தலைமையில் இரண்டு கூடுதல் கண்காணிப்பாளா்கள், 5-க்கும் மேற்பட்ட காவல் துணை கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள் உள்பட 700-க்கும் மேற்பட்ட காவலா்கள் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணியில் ஈடுத்தப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து நாமக்கல் காவல் கண்காணிப்பாளா் ராஜேஸ் கண்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அல்லாள இளைய நாயகருக்கு மரியாதை செலுத்த வருவோா் தங்களின் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் மட்டுமே வரவேண்டும், வாடகை வாகனங்களுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது. இருசக்கர வாகனங்களில் வருவோா் போக்குவரத்து விதிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். இதனைக் கண்காணிக்க போக்குவரத்து காவல் துறை சாா்பில் 10 தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருப்பவா்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்வதுடன், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தாா்.
அப்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் செல்வராஜ், சண்முகம், தனராஜி, பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதா, திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளா் இமயவா்மன், ஆய்வாளா்கள் செல்வராஜ், இந்திராணி, காவலா்கள் உடன் இருந்தனா்.