''மனைவிக்கு அதிகாரம் கொடுக்காதீர்கள்...'' - யுவராஜ் சிங் தந்தையின் கருத்து, நெட்டிசன்கள் கொதிப்பு!
தலைசிறந்த கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தையான முன்னாள் கிரிக்கெட் வீரர் யோக்ராஜ் சிங், யூடியூப் நேர்காணல் ஒன்றில் இந்தி மொழியை கேலி செய்தும் பெண்கள் குறித்து பாலியல்ரீதியான கருத்துகளை பேசியும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
அந்த நேர்காணலில் மென்மையான தொனியில் இந்தி பேசுபவர்களை கேலி செய்த அவர், ''ஒரு பெண் இந்தியில் பேசும்போது மிகவும் நன்றாக இருக்கிறது. அதுவே ஓர் ஆண் இந்தியில் பேசினால் அவன் என்னப் பேசுகிறான் என தோன்றுகிறது. அந்த வித்தியாசத்தை நான் உணர்கிறேன்'' என்றவர், ஆண்களின் மொழியாக பஞ்சாபியைக் குறிப்பிட்டிருக்கிறார்.
தவிர, "பெண்களுக்கு அதிகாரம் வழங்கக்கூடாது. மனைவிக்கு அதிகாரம் கொடுத்தால் உங்கள் வீட்டை அழித்துவிடுவார். சொல்வதற்கு மன்னிக்கவும், இந்திரா காந்தி இந்த நாட்டின் அதிகாரத்திலிருந்து நாட்டை அழித்தார். பெண்களுக்கு மரியாதை மற்றும் அன்பைக் கொடுங்கள். ஆனால், ஒருபோதும் அவர்களுக்கு அதிகாரம் கொடுக்க வேண்டாம்" என்று அந்த நேர்காணலில் யோக்ராஜ் சிங் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யோக்ராஜ் சிங்கின் இந்தப் பேச்சை நெட்டிசன்கள், 'பெண் வெறுப்புப் பேச்சு' என்றும், 'இந்திப் பேசும் மக்களை அவமதிக்கிறார்' என்றும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
யோக்ராஜ் 1980 மற்றும் 1981-க்கு இடையில் இந்தியாவுக்காக ஒரு டெஸ்ட் மற்றும் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான இவர் பல பஞ்சாபி மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தனது விளையாட்டு வாழ்க்கைக்குப் பின், சண்டிகரில் உள்ள 'யோக்ராஜ் சிங் அகாடமி'யில் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...