செய்திகள் :

BB Tamil 8 Day 98: `நீ போக வேண்டிய ஆளாண்ணே..?' எவிக்டான தீபக்; கண்ணீரில் முத்து

post image
சில போட்டியாளர்களுக்குத்தான் ஆத்மார்த்தமான, உண்மையான பிரிவு உபசார விழா நடக்கும். தீபக்கிற்கு நடந்தது அப்படியொரு மகத்தான ஃபோ்வெல். சக போட்டியாளர்கள் சிந்திய கண்ணீரில் உண்மையான பிரியத்தின் வெம்மையை பார்க்க முடிந்தது. ‘சாதிப்பதற்கு வயது ஒரு தடையில்லை’ என்கிற செய்தியை ஆழமாக உணர்த்தி விட்டுச் சென்றிருக்கிறார் தீபக்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 98

பொங்கலை முன்னிட்டு வேட்டி, சட்டையில் பாரம்பரிய லுக்குடன் வந்தார் விசே. “வெளிய இருந்து வந்தவங்க பண்ண சேட்டையால, உள்ளே இருந்தவங்க உடைஞ்சிருக்காங்க. அதில இருந்து மீண்டிருக்காங்க. என்னன்னு காத்தாட கார்டன் ஏரியால உக்காந்து பேசலாம். ஓகேவா பேபி?” என்கிற உற்சாகத்துடன் உள்ளே சென்றார்.

“போகில போட்டு எரிக்க வேண்டிய உங்க நெகட்டிவ் குணம் எது? பிக் பாஸில் மறக்க வேண்டிய தருணம் எது?” இதுதான் கேள்வி. “எப்பவுமே ஒருத்தரோட எதிர் சைடுல இருந்து யோசிப்பேன். இனிமே அப்படி இருக்கக்கூடாதுன்னு தோணிச்சு” என்றார் பவித்ரா.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

இதை அவர் மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. குதிரைக்கு கடிவாளம் கட்டியது போல் தன்னுடைய பார்வையில் மட்டுமே பலரும் பார்ப்பதால்தான் ஏராளமான பிரச்னைகள் உருவாகின்றன. மாறாக ‘அந்தாளு சைட்ல இருந்தும் இதைப் பார்ப்போம்’ என்று எதிர் தரப்பிலும் நின்று யோசித்தால் இன்னொரு பக்க நியாயங்களும் புரியக்கூடும். பிக் பாஸில் மறக்க விரும்புகிற தருணமாக, பொம்மை டாஸ்க்கில் விசே கண்டித்த விஷயத்தை பவித்ரா சொல்ல, அதற்கு விசே விளக்கம் அளித்த போது ‘அப்படின்னா மறக்க மாட்டேன்’ என்று புன்னகைத்தார் பவித்ரா. (விசே தைச்சு எடுத்துட்டுப் போன பொம்மை பவித்ராவுடையதாம்!).

எரிக்க வேண்டிய நெகட்டிவ் குணமும் மறக்க வேண்டிய தருணமும்

“எனக்கொரு கெட்ட பழக்கம் இருக்குண்ணே” என்று ஆரம்பித்தார் முத்து. எதிராளி கோபப்படும் போது அதன் காரணங்களை யோசிக்க மாட்டாராம். கோபம் மட்டுமே முதலில் கண்ணில் படுமாம். இனிமேல் அதற்கான காரணங்களையும் யோசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வாராம். பிக் பாஸில் மறக்க விரும்புகிற தருணமாக “கேப்டன்சி சமயத்தில் கடுமையாக பேசியது” என்றார் முத்து. (பவித்ராவிடம் விட்டுக்கொடுத்த தருணத்தை சொல்வார் என்று நினைத்தேன்). “அதிகாரம் வரும் போது தலைக்கனம் வரக்கூடாது.” என்றார் விசே.

அடுத்து எழுந்த விஷால் “என்னோட தயக்கத்தை விட்டொழிக்கணும்” என்றார். (பேண்ட்டை சரி செய்வது போல் அடிக்கடி எழுந்த போதே தெரிந்தது). “டீக்கடைல பேசறா மாதிரி பேசாதீங்கன்னு சவுண்டு மேட்டர் தொடர்பா சொன்னீங்க. அதுக்காக சவுண்டு கிட்ட பல முறை ஸாரி கேட்டிருக்கேன்” என்று பழைய விஷயத்தை தானே கிளறி விஷால் மன்னிப்பு கேட்டது நன்று. (இந்த விஷயத்தை சவுந்தர்யாவால் புரிந்து கொள்ள முடியவில்லை. பிறகு ரயான் தெளிவுப்படுத்தினார்).

அர்னவ்
அர்னவ்

‘சுயசந்தேகம்தான் என் பலவீனம்’ என்று ஆரம்பித்த வர்ஷினி ‘தேவையில்லாம தீபக் மீது கோபப்பட்டேன்” என்று சமீபத்திய சம்பவத்தை உதாரணம் சொல்ல ஜாலியாக ஜொ்க் ஆகி பார்த்தார் தீபக். அடுத்து எழுந்து ஜாக்கும் தீபக்குடன் போட்ட சண்டையைத்தான் குறிப்பிட்டார். (ஸ்கூல் டாஸ்க்) “அதை மறக்க விரும்பறேன். அவரு என் நல்லதுக்குத்தான் தீபக் அண்ணா சொல்லியிருக்காரு” என்ற ஜாக், மாற்ற வேண்டிய குணாதிசயம்

‘ஓவராக விளக்கம் கொடுப்பதாம்’. (யெஸ். அதிலும் இந்த சவுந்தர்யாவிற்கு விளக்கம் கொடுத்தே பாதி நேரம் கழிஞ்சு போச்சு!).

தீபக் எழுந்த போது பலத்த கைத்தட்டல். (அடப்பாவிகளா! ஒரு பக்கம் கையையும் தட்டிட்டு, இன்னொரு பக்கம் வீட்டுக்கும் அனுப்பறீங்க!) “முன்கோபம் என் பலவீனம். அருணுடன் சண்டை போட்ட தருணத்தை மறக்க நினைக்கிறேன்” என்றார் தீபக். (snobbish என்கிற ஆங்கில வார்த்தையை தீபக் மூலம் இந்தச் சமயத்தில் அறிந்து கொண்டேன்!).

ஓவராக விளக்கம் அளிப்பது ஜாக் பிரச்சினை போல ‘ஓவராக யோசிப்பது’ சுனிதா விட வேண்டிய குணமாம். ‘டிராஃபி உடைக்கும் ஏற்பட்ட மனவலி இருக்கே. பல நாள் தூங்கலை. அந்த மொமென்ட்டை மறக்க விரும்புகிறேன்’ என்று ஆத்மார்த்தமான துயரத்துடன் சொன்னார் சுனிதா.

‘எல்லோரும் ஒரு மாதிரின்னா.. சவுண்டு வேற மாதிரி’

அடுத்து எழுந்த சவுந்தர்யா, விசே அணிந்திருந்த கூலரைப் பார்த்து விட்டு ‘எங்க பார்க்கறீங்கன்னே தெரியலை சார்’ என்று சிரிக்க வைத்தார். “பத்தீங்களா.. இதுதான் சவுண்டு. எல்லோரும் ஒரு மாதிரி ஆரம்பிச்சா.. சவுண்டு மட்டும் வேற மாதிரி ஆரம்பிப்பாங்க. இது வீட்டுக்குப் போயி யோசிச்சாதான் புரியும். எம்.ஏ. பிலாஸபி.. எம்.ஏ.பிலாஸபி’ என்கிற மாதிரி சிரித்தார் விசே. ‘கோபம்’தான் சவுண்டின் பலவீனமாம். ‘ராணவ் விழுந்த போது நடிக்கறான்னு சொன்னது.. இன்னிக்கு வரைக்கும் வருத்தமா இருக்கு. அதை மறக்க நினைக்கிறேன்’ என்று பொருத்தமான தருணத்தை நினைவுகூர்ந்தார் சவுந்தர்யா.

அடுத்து எழுந்த சிவா சொன்ன விஷயம் அதிர்ச்சியையும் பரிதாபத்தையும் தந்தது. “நான் நிறைய பயப்படுவேன்” என்று விட்டொழிக்க வேண்டிய விஷயத்தைக் குறிப்பிட்ட சிவா, அடுத்து சொன்னது “நான் செய்யாத ஒரு விஷயத்திற்காக சமூகவலைத்தளங்களில் நிறைய அவதூறுகளை எதிர்கொண்டேன்.

சவுந்தர்யா
சவுந்தர்யா

என்னைத் தாண்டி என்னுடைய குடும்பத்தை, மனைவியை, குழந்தையை கூட விட்டு வைக்காமல் திட்டினார்கள்” என்று சிவா சொல்ல, விசே விசாரிக்கும் போது அது முத்துவின் ஆதரவாளர்கள் என்று தெரியவந்தது. அதைக் கேட்டதும் முத்துவின் முகம் சங்கடத்திலும் வருத்தத்திலும் ஆழ்ந்தது.

ஒருவரை நமக்குப் பிடிக்கும் என்றால் அது தொடர்பான ரசனையை, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டால் போதுமானது. நமக்குப் பிடிப்பவர்களைக் கொண்டாடுவதற்காக இன்னொருவரை மலினப்படுத்துவது மிகவும் கீழ்த்தரமான குணம். அவர்கள் மோசமான ரசிகர்கள். அதிலும் குடும்பத்தையெல்லாம் இழுத்து ஆபாசமாக கமெண்ட் செய்கிறவர்கள் மனிதர்களே அல்ல. ஆஃப்டர் ஆல்.. இது ஒரு கேம் ஷோ. இதற்காகவா இத்தனை மோசமாக ரியாக்ட் செய்வீர்கள்?! Shame on you!

அடுத்து எழுந்த ரயான், “நான் ரொம்ப கூச்சப்படுவேன். அந்தப் பழக்கத்தை எரிக்கணும்.. ராணவ் கூட நடந்த டாஸ்க்ல கொஞ்சம் ஓவரா போயிட்டேன். அதை மறக்க நினைக்கிறேன்” என்றார். விசே பிரேக்கில் செல்ல சிவாவிற்கு ஆறுதல் சொன்னார் முத்து.

ரவியை ஃபோகஸ் செய்து ரோஸ்ட் செய்த விசே

பிரேக் முடிந்த வந்த விசே “இப்ப ரீவிசிட் பண்ண எட்டு பேருக்கு வருவோம். வெளில போகும் போது உங்க கிட்ட ஒரு கோபம் தெரிஞ்சது. அது ஏன்?” என்கிற கேள்வியை ஆரம்பித்தார். இது பெரும்பாலும் அர்னவிற்குத்தான் பொருந்தும். “ஒரு டாஸ்க்ல மோசமா பட்டம் கொடுத்தாங்க. அந்தக் கோபம்தான். டைம் இருந்திருந்தா வீட்டுக்குள்ளயே முடிச்சிருப்பேன். அதான் மேடைல சொல்லிட்டேன்” என்றார் அர்னவ். (டாஸ்க் தரும் நெருக்கடியில் சொல்வதும் நிஜமாக சொல்வதும் ஒன்றா?!) “இதன் மூலம் நீங்கள் எப்படிப்பட்ட நபராக தெரிவீர்கள் என்பதையும் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று சரியாக அறிவுறுத்தினார் விசே. “அர்னவ் எல்லை மீறி பேசிய போது இன்னமும் ஸ்ட்ராங்கா கண்டிச்சிருக்கலாம்” என்று மற்ற போட்டியாளர்களையும் விசே மென்மையாக கடிந்து கொண்டார்.

“எனக்கு கோபம்லாம் இல்லை சார்.. ஜாலியாத்தான் போனேன்” என்று சிரித்துக் கொண்டே ஆரம்பித்த ரவியை “அப்ப நீங்க பார்ஷியாலிட்டி பார்க்கலையா சார்?” என்று குடைய ஆரம்பித்தார் விசே.

முந்தைய கேள்வி அர்னவ்விற்கான டார்கெட் என்றால் அடுத்த கேள்வி ரவியை ஃபோகஸ் செய்வது போல் அமைந்திருந்தது. “டாப் 8 ஆளுங்க பதில் சொல்லுங்க. யார் யார்லாம் உங்க மண்டையைக் கழுவினாங்க? எப்படியல்லாம் கழுவினாங்க?” என்று விசே ஆரம்பிக்க, பெரும்பாலான பதில்கள் ரவியை நோக்கியே சென்றன. முதலில் எழுந்த ஜாக் “நின்னா கருத்து… உக்காந்தா கருத்து..ன்னு கொட்டித் தீர்த்துட்டாரு சார்.. இந்த மனுஷன். சாச்சனாவும் கொஞ்சம் டிரை பண்ணாங்க” என்றார்.

தீபக்
தீபக்

அடுத்து எழுந்த தீபக், அதே ரவி மற்றும் சாச்சனாவை குறிப்பிட்டு “ரவிக்கு வந்த பர்ப்பஸே முதலில் புரியலை. ரெண்டாவது நாள்தான் அவரும் போட்டியாளர்ன்னு தெரிஞ்சது. அதுக்குள்ள பெட்டி விஷயத்தை ஆரம்பிச்சி நோண்டினாரு. அவரோட மாணவர் படையை அனுப்பிச்சி செய்தி சேகரிச்சாரு. நாங்க தெளிவா இருந்தோம். வந்தவங்களை முதலில் அனுப்பிட்டு அப்புறம் நாம அடிச்சுக்கலாம்ன்னு” என்று சொன்னது சுவாரசியமான பதில்.

“என்னை யாரும் மண்டையைக் கழுவலை சார். அக்கறையாதான் சொன்னாங்க” என்று தயக்கச் சிரிப்புடன் சொன்னார் விஷால். “விழுந்த அடி அப்படி. உங்க கேஸே வேறயாச்சே?!” என்று பதிலுக்கு நக்கலடித்தார் விசே. அடுத்து எழுந்த சவுந்தர்யா.. “ஒரு விஷயத்தை நம்பிடு.. நம்பிடு.. ன்னு சொல்லி செய்வினை வெக்கறா மாதிரி பண்ணாங்க. ‘யார் ஜெயிப்பாங்க’ன்னு ரவி கேட்டாரு. அவங்க எதிர்பார்க்கற பதிலை நம்ம வாயில இருந்து வரவழைக்கப் பார்த்தாங்க” என்றார்.

‘பொட்டி.. பொட்டி.. பொட்டி.. இம்சையா இருக்குங்க”

“பொட்டியை எடுக்கச் சொல்லி என்னை இம்சை பண்ணார் சார் ரவி. சினிமா வில்லன்க ஆளனுப்பற மாதிரி ஒவ்வொருத்தரையா அனுப்பி கேக்க வெச்சாரு. நான் மறுத்துட்டேன்” என்றார் ரயான். பவித்ராவிற்கும் அதே பிரச்சினைதான். “பீம் பாய்.. பீம்… பாய்.. லாக்கர்ல இருந்து அந்தப் பொட்டிய எடுத்து”.... அடுத்து எழுந்த முத்து “ரவி.. முதல்ல என்கரேஜிங்காத்தான் பேசினாரு. அப்புறம் என்னையும் பொட்டி எடுக்கச் சொல்லி கேட்டாரு” என்று தொடர முயற்சிக்க “ஐ அப்ஜெக்ட் திஸ் யுவர் ஆனர். ரவி முத்துவை கேட்கவேயில்லை” என்று ஜாக் ஆட்சேபம் தெரிவிக்க “எங்களுக்குள்ள பேசின விஷயம் உங்களுக்கு எப்படிம்மா தெரியும்” என்று லாஜிக்கலாக மறுத்தார் முத்து. பிறகு ரவியும் இதை ஒப்புக் கொள்ள ஜாக்கின் புகார் புஸ்வாணமாக மாறியது.

பிறகு ஆரம்பித்தார் விசே தனது கச்சோியை. “ஒருத்தர் ஜெயிக்கணும்.. ஒருத்தர் பொட்டி எடுத்துட்டு போகணும்.. ஒருத்தர் வெளியே போகணும்.. நீங்க யார் சார் இதையெல்லாம் முடிவு பண்ண. அப்ப முத்து ஜெயிக்கணும்.. ரயான் ஜெயிக்கக்கூடாதுன்னு சொல்ல வர்றீங்களா.. நீங்க என்ன பண்ணிட்டிருக்கீங்கன்னு தெரியுதா.. ஆட்டத்தையே கெடுக்கறீங்க.. உங்க கேமை ஆடுங்க..

ரவீந்தர்

அது பிரச்சினையில்ல. ஆனா இன்னொருத்தன் உழைப்பை கீழே இறக்க முயற்சிக்காதீங்க. ‘இதைத்தான் மக்கள் பேசிக்கறாங்க’ன்னு உங்க கருத்தை ஏன் திணிக்கறீங்க?” என்று விசே இறங்கி அடிக்க, ரவியின் முகம் மாறியது.

“நான் முத்துவை ஆதரிச்சுதான் வெளிலயும் பேசியிருக்கேன். அப்ப உள்ளவும் அப்படித்தானே பேசுவேன்.. தெரிஞ்சுதானே அனுப்பிச்சாங்க. நான் எதையும் மறைக்கலை. அப்புறம் இப்படி நிறுத்தினா எப்படி?. இங்கயும் ஜாக், தீபக்கையும் சப்போர்ட் பண்ணியிருக்கேன். இதனால எனக்கு ஒரு உபயோகமும் கிடையாது. என்னை தப்பா காட்டறா மாதிரி இருக்கு. விளையாட போறதில்லை” என்றெல்லாம் ரவி ஆதங்கப்பட்டார்.

பிரேக்கில் சென்ற விசே, நடுவில் அதை நிறுத்தி விட்டு மீண்டும் சர்ப்ரைஸ் விசிட் தந்து “ஏன்.. சார்.. ஒரு கேமையை நீங்க மாத்த டிரை பண்ணுவீங்க.. ஸ்பாயில் பண்ணுவீங்க.. அதை தட்டிக் கேட்க பொறுப்பு யாருக்கு இருக்கு?” என்று அவசர விளக்கம் தந்து விட்டு மீண்டும் மறைந்தார்.

ரவி ஆடும் அன்ஃபோ் ஆட்டம் - கண்டித்த விசே

விசே அடித்த அடியால் கலங்கிய ரவி “இப்ப என் தப்பை உணர்ந்துட்டேன். எல்லோரையும் சமமா ஹாண்டில் பண்ணியிருக்கணும்” என்று ஃபீல் செய்ய மற்றவர்கள் சமாதானப்படுத்தினார்கள். ஒருவர் விமர்சகராக இருக்கும் போதே எவருக்கும் பாரபட்சமி்னறி சமநிலையாகத்தான் இயங்க வேண்டும். அதிலும் ஒரு சக போட்டியாளராக போட்டியின் உள்ளே நுழையும் போது ‘நான் உனக்கு பிஆர்’ என்று சொல்வது அடிப்படையிலேயே சரியில்லை. “பவித்ரா.. ஃபைனல்ல வந்த பொண்ணுங்கள்ல நீயும் ஒண்ணு. பொட்டியை எடுக்கச் சொல்லி மண்டையைக் கழுவுவாங்க. சூதானமா இருங்க” என்று எச்சரித்தார் சிவா. எனக்கென்னமோ பவித்ராதான் பெட்டியை எடுப்பார் என்று தோன்றுகிறது. அதுதான் அவருக்கு சிறந்த சாய்ஸ் என்று இப்போதைக்கு தெரிகிறது.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

பிரேக் முடிந்து வந்த விசே, எவிக்ஷனுக்கான சமிக்ஞையை காட்டினார். “யார் போவாங்கன்னு நெனக்கறீங்க?” என்று அவர் பார்வையாளர்களிடம் கேட்க ‘ஜாக், விஷால், தீபக், பவித்ரா’ என்று பெயர்கள் வந்தன. “லவ் யூன்ற வார்த்தை இதுவரைக்கும் கெட்ட வார்த்தையா இருந்தது. நீங்க சொல்லிச் சொல்லி நானும் எங்க மாமாவுக்கு ஆசையா சொல்லப் போறேன்” என்று ஒரு பெண்மணி எழுந்து சொல்ல ‘மாமா..நீங்களும் பதிலுக்கு சொல்லுங்கோ.. ஒரு லவ் ஜோடியை சேர்த்து வெச்ச நிம்மதி எனக்கு’ என்று சபையை கலகலக்க வைத்தார் விசே.

எவிக்ஷன் டைம். “யாரா இருந்தாலும் அவங்க குடும்பத்தோட சிறப்பா பொங்கல் கொண்டாடுங்க” என்கிற ஆறுதல் மொழியை சொல்லி விட்டு கார்டை எடுத்து நீட்டினார் விசே. பலராலும் அதை நம்ப முடியவில்லை. ‘என்னது..?’ என்று அதிர்ச்சியுடன் வாயைப் பிளந்தார்கள். முத்து தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டார். கார்டில் இருந்தது தீபக்கின் பெயர். பார்வையாளர்கள் கூட அதிர்ச்சியுடன் அமர்ந்திருக்க ‘நீங்கதானே முடிவு பண்றீங்க?”என்று பாதி வழியில் கூறி விட்டுச் சென்றார் விசே.

‘என்னது.. தீபக் எவிக்ஷனா?’ - வீட்டார் அதிர்ச்சி

“டாப் 3ல வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்” என்று உண்மையான அதிர்ச்சியுடன் தர்ஷா சொல்ல “கப்பு அடிப்பேன்னுதான் நான் எதிர்பார்த்தேன்” என்று கலாய்த்தார் தீபக். சுனிதாவின் கண்களில் நீர். அதிர்ச்சியில் உறைந்திருந்தார் ஜாக். “ஆப்டர் ஆல் இது கேம். மக்கள்தான் முடிவு பண்றாங்க. எனக்கு நிறைவா இருக்கு. உன் ஆட்டத்தை ஆடிட்டே. இனிமே போனஸ்தான்னு என் பையன் சொன்னான். எனக்கிது போதும்” என்றார் தீபக்.

அனைவரையும் விட அதிகமாக அப்செட் ஆனவர் முத்துதான். சாச்சனா வெளியேறும் போது அழுதவர்தான். இப்போது ஏமாற்றத்தின் உச்சக்கட்டத்திற்கே சென்றவர், தீபக் அருகில் வந்ததும் “கொன்ருவேன். உன்னய.. அடப்போண்ணே..” என்று கிராமத்து வழக்கில் விலகிச் சென்றார். “அக்செப்டென்ஸ்.. அருண் சொன்னான்ல.. அதான் மேட்டர்” என்று அவருக்கு ஆறுதல் சொன்னார் தீபக் “நீயெல்லாம் போக வேண்டிய ஆளாண்ணே..?” என்று முத்துவின் கதறல் நிற்கவில்லை.

தீபக், ஜாக்குலின்
தீபக், ஜாக்குலின்

‘ஹப்பாடா.. நமக்கிருந்த கடுமையான போட்டிகளுள் ஒன்று குறைந்தது’என்று முத்து ஆனந்தக்கண்ணீர் வடிக்கிறார். அதை மறைப்பதற்காகத்தான் இப்படி எமோஷன் டிராமா ஆடுகிறார் என்று சொல்பவர்களும் இருக்கலாம். “இல்லைங்க.. இந்த வீட்டில் முத்து அதிகமாக டிராவல் செய்த ஆட்களில் ஒருவர் தீபக் ‘அண்ணே.. அண்ணே.. என்று கூடவே சுற்றி வந்தவர். எனவே இந்தக் கண்ணீர் உண்மையானதுதான்’ என்று சொல்பவர்களும் இருக்கலாம். பார்க்கும் பார்வையைப் பொறுத்துததான் இருக்கிறது. ஒருவர் வெடித்து அழும் போது சந்தேகத்தின் பலனைத் தருவதுதான் அடிப்படையான தர்மம். ஒருவேளை அந்தக் கண்ணீர் உண்மையாக இருந்து விட்டால்?!

ஒருவழியாக தன்னை சமாதானப்படுத்திக் கொண்ட முத்து, ‘ரெண்டு நிமிஷம் பேச மாட்டியா?” என்று தீபக்கை அழைத்து “இதை நீ ஈஸியா எடுத்துக்குவேன்னு தெரியும்” என்று ஆரம்பிக்க “இல்ல.. கஷ்டமாத்தான் இருக்கு” என்று அந்தச் சமயத்திலும் கவுன்ட்டர் தந்தார் தீபக். (விசேவிடமிருந்து வந்த பழக்கம் போல!).

“யாருக்குமே கிடைக்காத மரியாதை உனக்குத்தான் கிடைச்சிருக்கு. 25 வருஷம் இண்டஸ்ட்ரில இருந்ததை விட இந்த மூணு மாசம் உனக்கு அதிகமாக கொடுத்திருக்கும். இந்த வீட்டில் நான் அதிகமா மதிக்கற ஆள் நீதான்” என்று முத்து கலங்க. ‘தெரியுண்டா தம்பி’ என்று கட்டியணைத்துக் கொண்டார் தீபக்.

அதிகமாக அப்செட் ஆன முத்து - நடிப்பா, உண்மையா?

நண்டு லுங்கி பரிசுக் குறிப்பை அழுதுகொண்டே முத்து வாசித்தார். “பிக் பாஸிற்கு அப்புறமா நிறைய ரூல்ஸ் போட்டு நம்மை கண்டிச்சு வளர்த்தது தீபக் அண்ணன்தான்’ என்று பாசத்தைப் பொழிந்தார். கனத்த மனதுடன் டிராஃபியை உடைக்க வந்தார் தீபக். அப்போது குறுக்கிட்ட பிக் பாஸ் “நான் ஒரு டிராஃபி தரேன். அதை யாராலும் உடைக்க முடியாது. நீங்களே நெனச்சாலும் கூட முடியாது. இந்த சீசன் மட்டுமல்ல, எல்லா சீசனையும் கம்ப்பேர் பண்ணா ‘நீங்கதான் பெஸ்ட் கேப்டனா இருந்து முன்னுதாரணமா இருந்திருக்கீங்க” என்று சொல்ல “நீ ஜெயிச்சிட்டண்ணே…” என்று உணர்ச்சிவசப்பட்டார் முத்து.

ஒரு குடும்பஸ்தனாக தீபக் உணர்ந்து ஃபீல் செய்ய “உங்க பையன் கிட்ட சொல்றேன். உங்க அப்பா ஒரு சூப்பர் ஸ்டார்” என்று பிக் பாஸ் சொல்ல, அதைக் கேட்டு கண்ணீர் விட்டார் தீபக். “ஒரு புதிய ஆளா வெளியே போறேன். இந்த வீடு என்னை அந்த அளவிற்கு மாத்தியிருக்கு” என்று நெகிழ்ந்து அனைவரிடமும் விடைபெற்றார் தீபக்.

ரயான்
ரயான்

“அவர் கிட்ட ஒரு குட் வாங்க எத்தனை செத்திருக்கேன் தெரியுமா.. எங்க அண்ணன் ஜெயிச்சிருச்சு.. போங்கடா எல்லோரும்’ என்கிற மாதிரி ஆவேசமாக உலவினார் முத்து. (அவருக்குள் ஒரு சிறந்த கேரக்டர் ஆர்டிஸ்ட் இருப்பதை தமிழ் சினிமாவின் இயக்குநர்கள் நோட் செய்யுங்கள்!).

மேடையில் தீபக். அவரை பல வருடமாக டிவியில் கவனித்து வருவதால் சீனியர் என்கிற முறையில் விசே உண்மையாகவே மரியாதை தருகிறார். என்றாலும் “தீபக் சார்ன்னு சொல்லாதீங்க.. வேண்டாம்” என்று மறுத்தார் தீபக். “ஒரு அப்பனா என் புள்ளைய பெருமைப்படுத்தியிருக்கேன். வயது ஒரு எண்ணிக்கைதான். சாதிக்க அது தடையேயில்லை” என்று மகிழ்ச்சியுடன் சொன்ன தீபக்கை வழிமொழிந்தார் விசே.

வீட்டிற்குள் வந்த தீபக் “ஏன் எல்லோரும் சோகமா இருக்கீங்க.. சவுண்டு.. உனக்கு வர்ற சவுண்டைப் பார்த்தியா..” என்று சொல்ல பார்வையாளர்களின் கரகோஷம் கேட்டது. “உங்களை மாதிரி ஒரு அப்பா வேணும்” என்று நெகிழ்ந்தார் ஜாக். “இன்னமும் ஒரு வாரம்தான். விட்றாதீங்க” என்று எல்லோரையும் வாழ்த்தி விட்டு விடை பெற முனைந்த தீபக்கிடம் “உங்க ஸ்டைல்ல நிகழ்ச்சியை சைனிங் ஆஃப் பண்ணுங்க” என்கிற வாய்பை தீபக்கிடம் தந்தார் விசே.

விஷால், முத்துக்குமரன்
விஷால், முத்துக்குமரன்

வருங்காலத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தீபக் ஹோஸ்ட் செய்ய வேண்டும் என்கிற ஆசையை முத்து சொல்ல, விசேவும் அதை வழிமொழிய, ‘அய்யோ.. அதுக்கு இனிமேதான் கனவு காண ஆரம்பிக்கணும்..உழைக்கணும்.. தயார் ஆகணும்” என்றார் தீபக் தன்னடக்கமாக.

விசேவிற்கு பொங்கல் வாழ்த்து மற்றும் பிறந்த நாள் வாழ்த்தை சொல்லி மகிழ்ந்தார் பிக் பாஸ். இருவரும் விடைபெற்ற பிறகு வீட்டிற்குள் ரவி தனக்கு விழுந்த அடியைப் பற்றி சொல்லி ஃபீல் செய்ய “தீபக் அண்ணன் பெயருக்குப் பதிலா என் பேரு இருந்தா கூட எழுந்து போயிருப்பேன். மூணு பேருதான் முக்கியம். பிக் பாஸ், சேதுண்ணன்.. மக்கள். அவ்வளவுதான்” என்றார் முத்து.

இன்றைய பிரமோவில் வீட்டிற்குள் வரும் தர்ஷிகாவிற்கும் ரவிக்கும் ஆக்ரோஷமான வாக்குவாதம் நிகழ்வதைப் பார்க்க முடிகிறது. இருக்கு.. சம்பவம் இருக்கு.. பொறுத்திருந்து பார்ப்போம்.

BB Tamil 8: நாளை வைக்கப்படுகிறதா 'பணப்பெட்டி'?! - எடுக்கப் போவது யார்?

விஜய் டிவியில் வரும் வாரத்துடன் நிறைவடைகிறது பிக்பாஸ் சீசன் 8. பதினெட்டு போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் பிறகு வைல்டு கார்டு என்ட்ரி மூலம் ஆறு போட்டியாளர்கள் இணைந்தனர். அடுத்தடுத்த எவிக்‌ஷன் ... மேலும் பார்க்க

BB Tamil 8: `எதுவுமே பண்ணாம இவ்வளவு தூரம் வந்துட்டிங்க' - சௌந்தர்யா- சுனிதா இடையே மோதல்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 99-வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்னும் நிகழ்ச்சி முடிவட... மேலும் பார்க்க

BB Tamil 8: `யார் இவன்... எந்த சீசன்?’ அர்ணவை கிண்டல் செய்த சத்யா, ஜெஃப்ரி; காட்டமான ரவீந்தர்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 99-வது நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்னும் நிகழ்ச்சி முடிவட... மேலும் பார்க்க

BB Tamil 8: 'என் வாழ்க்கையில தலையிடாதீங்க..!' - விஷால் விவகாரத்தில் ரவீந்தரிடம் காட்டமான தர்ஷிகா

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 99-வது நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்னும் நிகழ்ச்சி முடிவடைய ச... மேலும் பார்க்க

BB Tamil 8: 'ஏன் மத்தவங்க ஆட்டத்தை திசை திருப்புறீங்க?' - ரவீந்தரைச் சாடிய விஜய் சேதுபதி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 98 -வது நாளுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி 13 வாரங்களை நிறைவு செய்திருக்கிறது. குறைவான வாக்குகளை பெற்று, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து அரு... மேலும் பார்க்க