ஆஸி. ஓபன்: இந்திய வம்சாவளி இளம் வீரருக்கு ஜோகோவிச் பாராட்டு!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போா்னில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
டென்னிஸ் உலகில் கிராண்ட்ஸ்லாம் பந்தயமான ஆஸி. ஓபன் தொடரில் பட்டம் வெல்வது மிகவும் கௌரவமானதாக கருதப்படுகிறது.
இந்த நிலையில், மெல்போா்ன் பாா்க் மைதானத்தில் இன்று(ஜன. 13) நடைபெற்ற ஆட்டத்தில், 10 முறை ஆஸி. ஓபன் சாம்பியன் பட்டம் வென்ற நோவக் ஜோகோவிச்சை எதிர்த்து இந்திய வம்சாவளி இளம் வீரர் நிஷேஷ் பசவரெட்டி களம் கண்டார்.
19 வயதேயான நிஷேஷ் பசவரெட்டி ஜோகோவிச்சுக்கு கடும் போட்டியளித்து முதல் செட்டை 6-4 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி அசத்தினார். எனினும், அடுத்தடுத்த செட்களை 6-3, 6-4, 6-2 என்ற கணக்கில் வென்றார் ஜோகோவிச்.
ஆட்டத்தின் நிறைவு செய்த் பின் பேசிய ஜோகோவிச், நிஷேஷ் பசவரெட்டியின் ஆட்டத்திறனை வெகுவாகப் பாராட்டினார். எதிர்காலத்தில் டென்னிஸில் அவரிடமிருந்து சாதனைகள் பல வெளிப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
யார் இந்த நிஷேஷ் பசவரெட்டி?
ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த சாய் பிரசன்னா - முரளிகிருஷ்ண பசவரெட்டி தம்பதியின் மகனாக 2005-ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தார். இவரது பெற்றோர் அமெரிக்காவுக்கு கடந்த 1999-ஆம் ஆண்டு குடிபெயர்ந்து வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. நிஷேஷ் பசவரெட்டியின் அண்ணன் நிஷாந்த்து ஒரு டென்னிஸ் வீரராவார்.
டென்னிஸ் போட்டிகளில் பட்டங்க்ள் பல வென்றுள்ள நிஷேஷ் பசவரெட்டி, ஏடிபி உலக டென்னிஸ் தரவரிசையில் கடந்தாண்டின் தொடக்கத்தில் 457-ஆவது இடத்திலிருந்த நிலையில், ஆண்டிறுதியில் 138-ஆவது இடத்துக்கு முன்னேற்றமடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்ததொரு அமெரிக்க வீரராக, ஆஸி. ஓபன் மூலம் கிராண்ட்ஸ்லாம் பந்தயத்தில் முதல்முறையாக கால்பதித்துள்ள நிஷேஷ் பசவரெட்டி வரும் ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக் காட்டுவார் என்பதே டென்னிஸ் சார்ந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பலரது பார்வையாக உள்ளது.