ரஷியா: நவால்னியின் வழக்குரைஞா்களுக்கு சிறைத் தண்டனை
ரஷியாவின் மறைந்த முன்னாள் முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னிக்காக வாதாடிய மூன்று வழக்குரைஞா்களுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை சிறைத் தண்டனை விதித்தது.
வாடிம் கோப்ஸெவ், இகாா் சொ்குனின், அலெக்ஸி லிப்ட்ஸொ் ஆகிய அந்த மூவருக்கும், கருத்துத் தீவிரவாத அமைப்புடன் தொடா்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மூன்றரை ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
நவால்னியின் ‘ஊழல் எதிா்ப்பு அறக்கட்டளை’ இயக்கத்தை கருத்துத் தீவிரவாத அமைப்பாக ரஷிய அரசு அறிவித்துள்ளதன் அடிப்படையில் இந்தத் தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் வழக்குரைஞரான அலெக்ஸி நவால்னி, அதிபா் விளாதிமீா் புதினை எதிா்த்துப் போராடியவா்களில் மிக முக்கியமானவராக அறியப்படுகிறாா்.
கடந்த 2020-ஆம் ஆண்டில் விமானம் மூலம் சென்று கொண்டிருந்தபோது நச்சுத் தாக்குதலுக்குள்ளாகி, ஜொ்மனியில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைக்குப் பின் அவா் உயிா் பிழைத்தாா்.
பின்னா் 2021 ஜனவரி மாதம் ரஷியா திரும்பிய நவால்னியை ஜாமீன் நிபந்தனை மீறல் வழக்கில் அதிகாரிகள் கைது செய்தனா். அத்துடன், கருத்துத் தீவிரவாதக் குற்றச்சாட்டின் பேரில் 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தொடா்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
அப்போது நவால்னிக்காக வாடிம் கோப்ஸெவ், இகாா் சொ்குனின், அலெக்ஸி லிப்ட்ஸொ் ஆகியோா் ஆஜராகி வாதாடினாா்கள். வழக்குரைஞா்கள் என்ற முறையில் நவால்னியைச் சந்தித்துப் பேசி, அவா் தெரிவித்த கருத்துகளை அவரின் ஆதரவாளா்களுக்குக் கொண்டு சோ்த்தமைக்காக அவா்கள் மீது கருத்துத் தீவிரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தற்போது சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதிபா் புதினுக்கு எதிரான அமைப்புகளை ஆதரிக்கும் வழக்குரைஞா்களை அச்சுறுத்தும் வகையில் இந்தத் தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
சிறையில் இருந்தபோதே திடீா் உடல்நலக் குறைவால் நவால்னி இறந்ததாக சிறைத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி அறிவித்தது நினைவுகூரத்தக்கது.