வெடித்துச் சிதறிய எலானின் ராக்கெட்! பதறாத எலான்!
எலான் மஸ்க்கின் விண்கலச் சோதனையில் ஸ்டார்ஷிப் ராக்கெட் வெடித்துச் சிதறியது.
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், தனது ஸ்டார்ஷிப் ராக்கெட் மூலம் விண்கலன்களை அனுப்பி சோதனை செய்து வருகிறது. இந்த நிலையில், தனது நிறுவனத்தின் ஏழாவது சோதனையாக, 10 மாதிரி செயற்கைக்கோள்களோடு ஸ்டாட்ஷிப் விண்கலம் வியாழக்கிழமை இரவில் விண்ணில் செலுத்தப்பட்டது.
வெற்றிகரமாகச் செலுத்தப்பட்ட ஸ்டார்ஷிப்பின் பூஸ்டர் பகுதி பிரிந்து, திட்டமிட்டபடி ஏவுதளத்தால் பிடிக்கப்பட்டது. ஆனால், பறக்கத் தொடங்கிய ஸ்டார்ஷிப் விண்கலம், சுமார் 8.5 நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்ததுடன், வெடித்தும் சிதறியது.
இருப்பினும், இந்த விபத்து குறித்து எலான் மஸ்க், தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, ``வெற்றி நிச்சயமற்றது; ஆனால், பொழுதுபோக்கு உறுதி’’ என்று தன்னம்பிக்கையோடு பதிவிட்டுள்ளார்.
இந்த நிகழ்வு, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விண்ணில் வெடித்துச் சிதறிய விண்கலத்தின் பாகங்களால் பாதிப்பு ஏற்படாமலிருக்க, அவ்வழியாகச் செல்லவிருந்த சுமார் 20 விமானங்களின் வழித்தடங்கள் மாற்றப்பட்டன.
எரிபொருள் கசிவால்தான் இந்த விபத்து நேர்ந்திருக்கும் என்று ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் சந்தேகிப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க:கேஜரிவால் கொள்கையால் பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி கவுன்சிலர்கள்!