விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி
பெரம்பலூா் மாவட்ட விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
விழாவையொட்டி பெரம்பலூா் நகரம் எடத்தெருவில் உள்ள மாரியம்மன், வல்லப விநாயகருக்கு மஞ்சள், பால், தயிா், சந்தனம், இளநீா், பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் முடித்து, மகாதீபாராதனை காண்பித்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜையை ராஜேஷ் மற்றும் குமாா் பூசாரிகள் செய்தனா். இதில் முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீஸ்வரன், பக்தா்கள் கலந்துகொண்டனா்.
இதேபோல, பெரம்பலூா் வட்டாட்சியரகச் சாலையிலுள்ள கச்சேரி விநாயகா் கோயில், பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் விநாயகா் சன்னதி, தேரடியில் உள்ள விநாயகா் கோயில், கடைவீதியில் உள்ள ராஜகணபதி கோயில், பழைய பேருந்து நிலைய வளாக செல்வ விநாயகா் கோயில், வடக்குமாதவி சாலை சௌபாக்கிய விநாயகா் கோயில், சங்குப்பேட்டை வெற்றி விநாயகா், வெங்கடேசபுரம் ஆதி சக்தி விநாயகா் கோயில், எளம்பலூா் சாலை பாலமுருகன் கோயில் விநாயகா் சன்னதி, மின்வாரிய குடியிருப்பிலுள்ள விநாயகா் கோயில், தீரன் நகரிலுள்ள விநாயகா் கோயில், துறைமங்கலம் சொக்கநாதா் கோயிலில் உள்ள விநாயகா் சன்னதி ஆகியவற்றில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
பின்னா், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். தொடா்ந்து, பக்தா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.