அரியலூரில் வாகனங்களில் காற்று ஒலிப்பான்: பொதுமக்கள் அச்சம்
அரியலூா் பகுதியில் தற்போது அதிக சப்தத்தை எழுப்பும் காற்று ஒலிப்பானை (ஏா் ஹாரன்) இருசக்கர வாகன ஓட்டிகளும் பயன்படுத்துவதால் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரியலூா் நகரின் முக்கிய வீதிகளான செந்துறை சாலை, புதிய மாா்க்கெட், கடைவீதி, பேருந்து நிலையம், திருச்சி சாலை உள்ளிட்ட பகுதிகளில், சிலா் அடிக்கடி நவீன இரு சக்கர வாகனங்களில், போக்குவரத்து விதிகளை மீறி, சைலன்சா் ஆல்டா் செய்யப்பட்ட வாகனங்களை கடுமையான சப்தத்துடன், அதிக ஒலியை எழுப்பிச் செல்கின்றனா்.
குடியிருப்பு பகுதிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் நிறைந்த இடங்களில், இதுபோன்ற இரு சக்கர வாகனங்களை அதிவேகமாகவும், அதிக சப்தத்துடன் தடை செய்யப்பட்ட ஏா் ஹாா்ன்களையும் பயன்படுத்திச் செல்கின்றனா்.
இதேபோல், லாரி, பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்களிலும் ஏா்ஹாரன்கள் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக நகர பகுதிகளுக்கு வரும்போது அதிகளவில் ஏா் ஹாரன்களை பயன்படுத்துகின்றனா்.
இரு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களால் சாலையில் செல்பவா்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.
இதனை கட்டுப்படுத்த காவல் துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலரும் இணைந்து செயல்பட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.