இஸ்ரேல் - காஸா போர் நிறுத்த ஒப்பந்தம்: இந்தியா வரவேற்பு!
இஸ்ரேல் - காஸா இடையே நடைபெற்று வந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பினர் ஏற்றுக்கொண்டதற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது.
கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்காவின் பல மாத பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இஸ்ரேலுக்கும் காஸாவைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போர்நிறுத்தம், பணயக்கைதிகள் விடுதலை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.
கடந்த 15 மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த இஸ்ரேல் - காஸா இடையிலான போர் காஸாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். இந்த நிலையில், தற்போது இரு தரப்பினரும் முழுமையாக ஒப்புதல் அளித்ததால் இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் வருகிற ஞாயிறு (ஜன. 19) முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 65 பேர் பலி!
இந்த ஒப்பந்தத்தில் ஆறு வார ஆரம்பக்கட்ட போர் நிறுத்தம், இஸ்ரேலிய படைகள் காஸாவில் இருந்து திரும்பப் பெறப்படுதல், இஸ்ரேலால் சிறை பிடிக்கப்பட்ட பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் சிறை பிடிக்கப்பட்ட பணயக்கைதிகள் விடுவிக்கப்படுதல் போன்ற ஒப்பந்தங்கள் இருதரப்பிலும் ஏற்கபட்டுள்ளன.
இந்தப் போரால் 46,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு காஸாவின் மக்கள்தொகையில் 90% பேர் இடம்பெயர்ந்து தங்கள் வாழ்வாதாரங்களைத் தொலைத்துள்ளனர்.
போர்நிறுத்தம் தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், "காஸாவில் பணயக்கைதிகள் விடுதலை மற்றும் போர் நிறுத்தத்திற்கான ஒப்பந்தத்தின் அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். இதனால் காஸா மக்களுக்கு பாதுகாப்பான, நிலைத்த மனிதாபிமான உதவிகள் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கவும், போர் நிறுத்தத்தை ஏற்படுத்தவும், பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்தோம்" என்று குறிப்பிட்டுள்ளது.