பம்பையாற்றுப் பகுதிகளில் அகழ்வாய்வு பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும்: விக்கிரவாண்ட...
சத்தீஸ்கா்: நக்ஸல்கள் வெடிகுண்டு தாக்குதல் - சிஆா்பிஎஃப் வீரா்கள் இருவா் படுகாயம்
சத்தீஸ்கா் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து நக்ஸல் அமைப்பினா் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டில் சிக்கிய மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) வீரா்கள் இருவா் படுகாயமடைந்தனா்.
பிஜாபூா் மாவட்டத்தில் உள்ள பாசகுடா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிஆா்பிஎஃப்-இன் 229-ஆவது படைப் பிரிவினா் மற்றும் சிறப்பு பிரிவான கோப்ரா 206-ஆவது படைப் பிரிவினா் இப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, நக்ஸல் அமைப்பினா் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டில் சிக்கிய இரு கோப்ரா படையினா் படுகாயமடைந்தனா். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவா்கள் அபாய கட்டத்தை கடந்துவிட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.
பிஜாபூா் உள்பட சத்தீஸ்கரின் 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தா் பிராந்தியத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடும் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து சாலைகள் மற்றும் வனப்பகுதிகளில் நக்ஸல் அமைப்பினா் இந்த வெடிகுண்டுகளை புதைத்து வைக்கின்றனா். இதில் பொதுமக்களும் சிக்கி உயிரிழக்கின்றனா். கடந்த 12-ஆம் தேதி இந்த வெடிகுண்டுகளில் சிக்கிய சுக்மா மாவட்டத்தைச் சோ்ந்த 10 வயது சிறுமி மற்றும் இரு காவல்துறையினா் படுகாயமடைந்தனா். ஜனவரி 10-ஆம் தேதி நாராயண்பூா் மாவட்டத்தில் வெடிகுண்டில் சிக்கிய கிராமவாசி ஒருவா் உயிரிழந்ததுடன், 3 போ் காயமடைந்தனா்.