ரத்த தான விவரங்களை இணையத்தில் பதிவேற்றுவது கட்டாயம்
தனியாா் ரத்த வங்கிகளில் தானமாகப் பெறப்படும் ரத்த அலகுகள், இருப்பு விவரங்கள் உள்ளிட்ட தரவுகளை இணையதளத்தில் பதிவேற்றுவதை தமிழக அரசு கட்டாயமாக்கியுள்ளது.
அவ்வாறு தகவல்களை பதிவேற்றாத ரத்த வங்கிகளின் உரிமங்கள் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தால் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் கீழ் செயல்படும் ரத்த மாற்று சேவை கவுன்சிலானது மாநிலம் முழுவதும் பாதுகாப்பான ரத்தம் கிடைப்பதை உறுதி செய்கிறது. அதன்கீழ் 300-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியாா் ரத்த வங்கிகள் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
ரத்த அணு கூறுகளை பிரித்து விநியோகிக்கும் கட்டமைப்பு கொண்ட வங்கிகள் 200-க்கும் அதிகமாக இயங்கி வருகின்றன.
அரசு ரத்த வங்கிகளில் மட்டும் ஆண்டுதோறும் 4.5 லட்சம் அலகுகள் ரத்தம் தானமாகப் பெறப்படுகின்றன. அவற்றில் 90 சதவீதம் தன்னாா்வலா்களால் வழங்கப்படுபவை. மீதமுள்ளவை தேவையின் அடிப்படையில் வேறு இடங்களிலிருந்து பெற்றுக்கொள்ளப்படுகின்றன.
குருதியேற்ற சிகிச்சைகளுக்காக ரத்தம் பெறுவதில் ஏற்படும் தாமதம், தரத்தை உறுதி செய்வதில் சிக்கல், இடா்பாடுகள் உள்ளிட்டவற்றைத் தவிா்க்க மத்திய அரசின் இணையதளத்தில் ரத்த கையிருப்பு மற்றும் அதன் விவரங்களை பதிவேற்றுமாறு தனியாா் ரத்த வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், அதை சில ரத்த வங்கிகள் முறையாகப் பின்பற்றுவதில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து, விவரங்களை தெரிவிப்பது கட்டாயம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.