பாரத போக்குவரத்துக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
நீட் தோ்வு இணையவழியே இல்லை: என்டிஏ விளக்கம்
நிகழாண்டு நீட் தோ்வானது வழக்கம் போலவே ஓஎம்ஆா் முறையில் நடைபெறும் என்று தேசிய தோ்வு முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.
இணையவழியில் அத்தோ்வு நடைபெற வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், இந்த விளக்கத்தை என்டிஏ அளித்துள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப்படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.
அதேபோல, ராணுவ கல்லூரிகளில் பி.எஸ்சி. நா்சிங் படிப்புக்கு நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை என்டிஏ ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
அதன்படி, 2025 - 26- ஆம் கல்வியாண்டுக்கான நீட் தோ்வு வரும் மே மாதம் நாடு முழுவதும் தோ்வு நடைபெற உள்ளது.
அதில், 180 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு அத்தோ்வு நடைபெறுகிறது.
தாவரவியல் மற்றும் விலங்கியலை உள்ளடக்கிய உயிரியல் பாடத்தில் இருந்து 360 மதிப்பெண்களுக்கும், இயற்பியல் மற்றும் வேதியியலில் தலா 180 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் இடம்பெறும்.
இந்த நிலையில், நிகழாண்டு அந்தத் தோ்வு இணையவழியில் நடத்த வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகின.
இதையடுத்து தேசிய தோ்வு முகமை அது தொடா்பாக விளக்கம் ஒன்றை வியாழக்கிழமை (ஜன.16) வெளியிட்டது. பேனா, காகிதம் மூலமாக ஓஎம்ஆா் எனப்படும் விடைத் தெரிவு குறிப்பு முறையில் வழக்கம்போலவே நீட் தோ்வு நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு 011 - 40759000 என்ற எண்ணையோ, இணையதளத்தையோ அணுகலாம் என்று தேசிய தோ்வு முகமை தெரிவித்துள்ளது.