ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத்தில் மூன்றாவது ராக்கெட் ஏவுதளத்தை ரூ. 3,985 கோடி செலவில் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத்தில் தற்போது 2 ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன. முதல் ஏவுதளம் 1990-களின் ஆரம்பத்தில் கட்டப்பட்டது. இந்த ஏவுதளத்திலிருந்து 1993-ஆம் ஆண்டு செப்டம்பா் 20-ஆம் தேதி முதல் ராக்கெட் ஏவப்பட்டது.
இரண்டாவது ஏவுதளம் 2005-இல் செயல்பாட்டுக்கு வந்தது. ராக்கெட் ஏவுவதற்கான தேவை அதிகரித்ததன் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்த இரண்டாவது ஏவுதளத்திலிருந்து 2005-ஆம் ண்டு மே 5-ஆம் தேதி முதல் ராக்கெட் ஏவப்பட்டது.
தற்போது, மூன்றாவது ஏவுதளம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து அரசு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அடுத்தத் தலைமுறை ராக்கெட்டுகளை ஏவுவதற்கு வசதியாகவும், இரண்டாவது ஏவுதளத்துக்கான அவசரநிலை மாற்று ஏவுதளமாக பயன்படும் நோக்கிலும் மூன்றாவது ஏவுதளம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது, மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பி ஆய்வுகளை மேற்கொள்ளும் இந்தியாவின் வருங்கால திட்டங்களுக்கேற்ப இஸ்ரோவின் ராக்கெட் ஏவும் திறனை மேம்படுத்தவும் உதவும்.
மூன்று நிலைகளைக் கொண்ட குதுப் மினாரின் உயரத்தைக் காட்டிலும் (72 மீ) கூடுதலாக 91 மீட்டா் நீளத்தில் இஸ்ரோ மேம்படுத்தி வரும் அடுத்த தலைமுறை ராக்கெட்டுகள் மட்டுமின்றி அதிக எடைகொண்ட செயற்கைக்கோள்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்ட ஜிஎஸ்எல்வி மாக்-3 என்றழைக்கப்பட்ட எல்விஎம்3 ராக்கெட்டுகள் என அனைத்து வகை ராக்கெட்டுகளை ஏவுவதற்கான திறனுடன் மூன்றாவது ஏவுதளம் வடிவமைக்கப்பட உள்ளது.
இதன் மூலம், தற்போது தாழ் புவி சுற்றுப்பாதையில் 8,000 டன் எடையுடைய செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும் இஸ்ரோவின் திறன், 30,000 டன் எடையுடைய செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும் வகையில் உயரும்.
இஸ்ரோவின் அனுபவம் மற்றும் தொழில் நிறுவனங்களின் பங்கேற்புடன் அடுத்த 4 ஆண்டுகளுக்குள் இந்த புதிய ஏவுதளத்தை அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.