தொழிற்கல்விப் படிப்புகளில் அருந்ததியா் மாணவா்கள் அதிகம் பயன்: அமைச்சா் மா.மதிவே...
ஷரோன் ராஜ் கொலை: கிரீஷ்மா குற்றவாளி என நிரூபித்த முக்கிய தடயம் எது?
கேரள மாநிலத்தை உலுக்கிய ஷரோன் ராஜ் கொலை வழக்கில், குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருக்கும் கிரீஷ்மாவுக்கு எதிரான ஆதாரங்களில், தடயமே இல்லாமல் கொலை செய்வது எப்படி என கூகுளில் தேடிய டிஜிட்டல் ஆதாரம்தான் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஷரோன் ராஜ் கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்டிருந்த கிரீஷ்மா மற்றும் அவரது உறவினர் ஆகியோர் குற்றவாளிகள் என்றும், கிரீஷ்மாவின் தாய்க்கு எதிரான போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரை விடுதலை செய்தும் விசாரணை நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருந்தது. கிரீஷ்மாவின் தாய் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என ஷரோன் குடும்பத்தினர் கூறியிருக்கிறார்கள்.
குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டிருக்கும் இருக்குமான தண்டனை விவரத்தை நீதிமன்றம் நாளை அறிவிக்கவிருக்கிறது.
ஆயுர்வேத மருந்து என்று கூறி விஷத்தை தண்ணீரில் கலந்து ஷரோனுக்குக் கொடுத்து கிரீஷ்மா கொலை செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகையின்படி, ஷரோன் ராஜ் 2022ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனது காதலி கிரீஷ்மா வீட்டுக்கு நண்பருடன் வந்துள்ளார். வீட்டுக்கு வந்த ஷரோனுக்கு அவரது காதலி, கசாயம் என்று கூறி ஒரு மருந்து கொடுத்துள்ளார். அதைக் குடித்த ஷரோன், தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளார். பிறகு திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு உடல் உறுப்புகள் செயலிழந்து 11 நாள்களில் மரணமடைந்தார்.
மருத்துவ பரிசோதனையில், அவர் ஆசிட் போன்ற திரவத்தைக் குடித்ததால், அவரது உடல் உறுப்புகள் சேதமடைந்து பலியானதாகக் கூறப்படுகிறது. இது குறித்து காவல்நிலையத்துக்கும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்தது.
இது தமிழகம் மற்றும் கேரளத்தை உலுக்கியது. ஷரோன் ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த காவல்துறையினர் தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகையில், கிரீஷ்மா இதற்கு முன்பே ஷரோனைக் கொலை செய்ய 5 முறை முயன்றதாகவும் அது தோல்வியில் முடிந்ததாகவும் குறிப்பிட்டிருந்தது.
கொலை நடந்து 73 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கிரீஷ்மா, கொலை நடப்பதற்கு 10 மாதங்களுக்கும் மேலாக ஷரோனைக் கொலை செய்ய திட்டம் தீட்டி, கூகுளில் பல விஷயங்களைத் தேடி தனது திட்டத்தை வடிவமைத்துள்ளார். இதில், கிரீஷ்மாவின் தாய் சிந்து மற்றும் மாமா நிர்மலகுமரன் நாயருக்கும் பங்கிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ராணுவத்தில் பணியாற்றும் ஒருவருடன், தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகும், காதலில் இருந்து விலக ஷரோன் ஒப்புக் கொள்ளாததால், கிரீஷ்மா இந்த கொலையை நிகழ்த்தியிருக்கிறார்.
அதன்படி, முதலில் கல்லூரியிலேயே விஷம் கலந்த தண்ணீரை, டோலோ மாத்திரைப் போட கொடுத்துள்ளார். ஆனால், மாத்திரை மிகக் கசப்பாக இருந்ததாகக் கூறி அதனை ஷரோன் துப்பிவிட்டாராம். பிறகு, விஷம் கலந்த பழச்சாறு கொடுத்தபோதும் அதனை ஷரோன் ஏதோ காரணத்தால் குடிக்காமல் இருந்துள்ளார்.
இதுபோல ஐந்து முறை தோல்வியடைந்த நிலையில்தான், இறுதியாக ஷரோன் ஆயுர்வேத மருந்து என்று சொல்லிக் கொடுத்த விஷத் தண்ணீரைக் குடித்து, இல்லாத காதலுக்காக இன்னுயிரை இழந்துள்ளார்.
கிரீஷ்மாவின் செல்லிடப்பேசியில் கொலை செய்வது எப்படி என்று கூகுளில் தேடியதை ஆதாரமாக வைத்தே, அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், ஷரோன் ராஜ், கிரீஷ்மா வீட்டுக்கு வருவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பும், தனது செல்போனில், கொலை செய்வது எப்படி என்று விக்கிபிடியாவில் தேடியிருப்பதை, நீதிமன்றத்தில் காவல்துறையினர் முக்கிய ஆதாரமாக சமர்ப்பித்தனர். அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அது மட்டுமல்லாமல், கொலை செய்தால் எத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனை என்பதையும் முன்கூட்டியே கிரீஷ்மா கூகுளில் தேடியதாகவும் கூறப்பட்டிருந்தது. ஒரு வேளை அவருக்கான பதில் நாளை நீதிமன்றம் தண்டனை விவரங்களை அறிவிக்கும்போது கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஷரோன் ராஜை விஷம் வைத்துக் கொலை செய்ய உதவியதாகவும், தடயங்களை அழித்ததாகவும், கிரீஷ்மாவின் தாய் மற்றும் உறவினர் கைது செய்யப்பட்ட நிலையில், தாய்க்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்று நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது.
இதில் விநோதம் என்னவென்றால், தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, உயிரிழக்கும் நிலையிலும் கிரீஷ்மா கலந்துகொடுத்த ஆயுர்வேத மருந்தைக் குடித்த பிறகுதான் தனக்கு இப்படி ஆனது என்று பெற்றோரிடமோ, மருத்துவர்களிடமோ, காவல்துறையிடமோ ஷரோன் கூறவில்லை என அவரது நண்பர்கள் கூறியிருந்தனர். ஷரோனுடன் சென்ற நண்பர்கள் கூறியதை வைத்துத்தான் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சாகும் நிலையிலும் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூட, காவல்துறையிடம், கிரீஷ்மா தனக்கு விஷம் கலந்து கொடுத்திருக்க வாய்ப்பில்லை என்றே ஷரோன் கூறியதாக காவல்துறையினர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.